தமிழ்நாடு

tamil nadu

மகளிர் கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியையும் வென்றது தென்ஆப்பிரிக்கா!

By

Published : Mar 17, 2021, 5:14 PM IST

இந்திய மகளிர் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

IND W v SA W, 5th ODI: Bosch, du Preez star as visitors win by 5 wickets, seal series 4-1
IND W v SA W, 5th ODI: Bosch, du Preez star as visitors win by 5 wickets, seal series 4-1

தென் ஆப்பிரிக்கா, இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 17) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பிரியா புனியா (18), ஸ்மிருதி மந்தானா (18), பூனம் ராவத் (10) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் மிதாலி ராஜ் - ஹர்மன்பிரீத் கவுர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் ரிட்டையர்ஹர்ட் முறையில் களத்திலிருந்து வெளியேறினார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மிதாலி ராஜ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 55ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிதாலி ராஜ் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 49.3 ஓவர்களில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மிக்னான் டு ப்ரீஸ் -அன்னே போஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம், தென்ஆப்பிரிக்க மகளிர் அணி 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்க அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அன்னே போஷ் ஆட்டநாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து லெஜண்ட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details