நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் ஆட்டநாள் இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது.
நேற்றைய இரண்டாம் இரண்டாம் ஆட்டநாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி இன்று 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஹனுமா விஹாரி (9), ரிஷப் பந்த் (4), முகமது ஷமி (5), பும்ரா (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், ஜடேஜா 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
இதைத்தொடர்ந்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களான டாம் லாதம், டாம் பிளெண்டல் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
குறிப்பாக இடதுகை வீரர் டாம் லாதம் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 103 ரன்களைச் நிலையில், அவர் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சினால், வில்லியமன்சன் ஐந்து ரன்களிலும், டாம் பிளெண்டல் 55 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் செய்து ஆறுதல் தந்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்து 132 ரன்களை எட்டியது. ராஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோர் தலா ஐந்து ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால், நியூசிலாந்து அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.