தமிழ்நாடு

tamil nadu

'க/பெ ரணசிங்கம்' இன்னொரு வலி: டீசரை பாராட்டிய வைரமுத்து!

By

Published : May 25, 2020, 11:54 AM IST

விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெ ரணசிங்கம்' படத்தின் டீசரை பார்த்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Vairamuthu
Vairamuthu

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நான்காவது முறையாக ஒன்றிணைந்து பணியாற்றியிருக்கும் திரைப்படம் 'க/பெ ரணசிங்கம்'. ரங்கராஜ் பாண்டே, வேல ராமமூர்த்தி, 'பூ' ராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

சமூக அரசியல் பேசிய 'அறம்' திரைப்படத்தைத் தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தண்ணீர், காற்று, நிலம் ஆகியவை நாட்டுக்குள் மட்டும் அல்ல; சர்வதேச அளவிலும் அரசியலாக இருக்கிறது. நாட்டுக்குள் சாதி, மத அரசியல் முக்கியமானது என்றால், சர்வதேச அளவில் பஞ்ச பூதங்களில் முக்கியமான காற்று, தண்ணீர் ஆகியவை காலம் காலமாக அரசியல் செய்யக்கூடிய அம்சங்களாக இருந்துவருகின்றன.

அதிகாரம் விளிம்புநிலை மக்களை எப்படிச் சுரண்டுகிறது, மக்களின் கிளர்ச்சி எப்படியிருக்கும் என்பதை இயக்குநர் டீசரில் அழகாக விவரித்துள்ளார்.

டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே நெட்டிசன்களையும் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. அதுமட்டுமல்லாது படம் குறித்தான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தின் டீசரை பார்த்த வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நல்ல கலைகளெல்லாம் மனிதகுலத்தின் வலியிலிருந்து வழிந்தவை. இந்தப் படம் இன்னொரு வலி. இது வெற்றிபெறக் கூடும் என்று என் நம்பிக்கை நரம்பு துடிக்கிறது. பார்ப்போம்..." என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்சேதுபதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த காயத்ரி ரகுராம்!

ABOUT THE AUTHOR

...view details