தமிழ்நாடு

tamil nadu

ஆஸ்கர் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெறாத 'ஜெய் பீம்'!

By

Published : Feb 8, 2022, 8:17 PM IST

சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' உள்பட எந்தவொரு இந்தியத் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம் பெறவில்லை எனும் தகவல் வெளியாகி இந்திய சினிமா ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

ஆஸ்கர் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஜெய் பீம்'!
ஆஸ்கர் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஜெய் பீம்'!

த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. இதில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இருளர்கள் இன மக்களின் வாழ்வில் உள்ள சிக்கல்களையும், நீதியரசர் சந்துருவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இத்திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டினர்.

பாராட்டுகளுக்கு நேரெதிராக, இத்திரைப்படம் குறிப்பிட்ட வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் உள்நோக்கில் உருவாக்கப்பட்டிருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இருப்பினும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு இந்தியா முழுவதும் இருந்து ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

அத்துடன் திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில், அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனைப் படைத்தது. அதேபோல் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியிலும் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது.

சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யூ-ட்யூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்திருந்தது.

இந்நிலையில் இன்று (பிப்.8) மாலை வெளியான ஆஸ்கர் விருதின் இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியலில் 'ஜெய் பீம்' இடம் பெறவில்லை. நாமினேஷன் பட்டியலில் இடம் பெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜெய் பீம்' திரைப்படம் இடம் பெறாததால் சூர்யாவின் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், மலையாளத் திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவான 'மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம்' உள்ளிட்ட எந்த ஒரு இந்திய திரைப்படங்களும் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அசோக் செல்வனின் 'நித்தம் ஒரு வானம்' டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர்!

ABOUT THE AUTHOR

...view details