தமிழ்நாடு

tamil nadu

தலைமுறையை மாற்றிய தேடல் நாயகன் ரஹ்மான்

By

Published : Jan 6, 2022, 4:54 PM IST

film composer AR Rahman
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ()

இசை என்றால் இளையராஜா, தேவா என்று இருந்த காலகட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு தலைமுறையையே தன்வசமாக்கியவர் ரஹ்மான்.

உலகமயமாதல், கணினியின் வருகை, தூர்தர்ஷன், சச்சின் டெண்டுல்கர் என்று வேகமாகச் சென்றுகொண்டிருந்த காலகட்டம் 1990. புதிய தேடல்களின் ஆரம்பமாக இருந்த காலகட்டத்தில் வந்தவர்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். சின்ன சின்ன ஆசை, புது வெள்ள மழை என ஆரம்பித்த பாடல்களின் இசை வடிவமைப்பு அந்தக் காலகட்ட மக்களுக்குப் புதிய விருந்தாக அமைந்தது.

இசை என்றால் இளையராஜா, தேவா-ன்னு இருந்த காலகட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரோஜா திரைப்படம் மூலம் சிறந்த பாடல்கள் கொடுத்த ரஹ்மானின் வாழ்க்கைப் பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. சிறு வயது முதலே தன் தந்தை மாதிரி இசையின் மீது ஆர்வம்கொண்ட ரஹ்மானை வறுமை வாட்டியது. தந்தையை இழந்த ரஹ்மானின் வாழ்க்கை பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு இசையை நோக்கி நகர்ந்தது.

இளையராஜா, தேவா

ரஹ்மானின் பயணம்

சின்ன இசையமைப்பாளர்கள் முதல், இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், டி. ராஜேந்தர் போன்ற பல இசை அமைப்பாளர்களிடம் உதவியாளராக வேலை செய்துள்ளார். தன் நண்பர்களுடன் இணைந்து இசைக் கச்சேரிகளிலும், இசைக்குழுவுடன் இணைந்தும் பணியாற்றினார், வறுமையின் காரணமாக ஒருமுறை தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார்.

சிறுவயதில் இசையின் பல நுணக்கங்களைக் கற்று அறிந்தார். பல விளம்பரங்களிலும், ஆவணப்படங்களிலும் பணியாற்றிபோதுதான் மணிரத்னத்தின் அறிமுகம் கிடைத்து தமிழ் சினிமாவில் பணியாற்றத் தொடங்கினார்.

அடுத்தடுத்து வந்த ஜென்டில்மேன், காதலன், பம்பாய், மே மாதம் போன்ற படங்கள் ரஹ்மானின் இசையை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தது. ஆரம்பம் முதலே தன் இசை என்பது ஒரு வட்டத்திற்குள் நின்றுவிடக் கூடாது, அது அனைத்து மக்களுக்கும் சென்றுசேர வேண்டும் என்பதில் ரஹ்மான் தீவிரமாக இருந்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

பொதுவாக தமிழ் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு ஜானர் மட்டும்தான் வரும் என்ற முத்திரையை தமிழ் சினிமாவில் மிக எளிதில் பதித்துவிடுவார்கள். அந்த பிம்பம் ரஹ்மானையும் தொடர்ந்தது.

ரஹ்மானின் ஆரம்ப காலங்களில் அவருக்கு மேற்கத்திய இசை மட்டுமே தெரியும் என்ற பிம்பம் ஒன்று ரஹ்மானைச் சுற்றி உருவானது. அந்தப் பிம்பத்தை உடைத்த படம் கிழக்குச் சீமையிலே முழுக்க முழுக்க கிராமத்து மண் சார்ந்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ரஹ்மானின் கிராமிய இசை அனைத்து மக்களாலும் பேசப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் பயணம் கருத்தம்மா, தாஹ்மகால் வரை தொடர்ந்தது.

1995 காலகட்டம்

அடுத்து வந்த காதல் தேசம், ஜீன்ஸ், மின்சார கனவு, போன்ற படங்களின் பாடல்கள் ரஹ்மானை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றது. ரஹ்மானின் இசை என்றால் கண்டிப்பாக பாடல்கள் ஹிட், குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் வரை அவரின் இசை அனைவருக்கும் பொதுவானதாக அமைந்தது அந்தக் காலகட்டம்தான்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

1996, 1997 காலகட்டங்களில் தமிழ், இந்தி என ரஹ்மான் பிஸியாக வேலைசெய்த காலகட்டங்கள். பாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை மற்ற தென்னிந்திய டெக்னிஷியன்களுக்கு அவர்கள் எப்போதும் பெரிய மதிப்பு கொடுப்பதில்லை. அது ரஹ்மானுக்கும் நடந்தது.

சமீபத்தில் ஒரு நேர்காணலுக்குப் பதில் கொடுத்த ரஹ்மான், தனக்கு இந்தி படங்களில் வாய்ப்புகள் கொடுப்பதில்லை என்றும், தன் பெயரை கெடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

ரஹ்மான் இப்படி கூறுவது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பு ஒரு audio launchஇல் ரஹ்மானை சல்மான் கான் insult செய்வதாகட்டும், ஒரு பேட்டியில் அர்னாப் கோஸ்வாமி ரஹ்மானை அவமதிப்பதாகட்டும் ரஹ்மான் பல தடைகளைக் கடந்துதான் வர வேண்டியதாக இருந்தது.

மணிரத்னம், ஷங்கர், ராஜிவ் மேனன், போன்ற முன்னணி இயக்குநர்களுடனும், ரவி வசந்த், சரண் போன்ற வளர்ந்துவரும் இயக்குநர்களுடனும் பணியாற்றத் தொடங்கினார். 1999-களின் இறுதியில் கணினிகள் தமிழ்நாட்டில் மூலைமுடுக்கெல்லாம் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் காதலர் தினம் என்ற படத்தின் மூலம் ஏ.ஆர்ம், வாலியும் பாடல்களின் வரிகளில் செய்த புதுமை பலரையும் பிரமிக்கவைத்தது.

2005 காலகட்டம்

2004, 2006-களில் அடுத்தடுத்து இந்திப் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய ரஹ்மானால் தமிழ்ப் படங்களில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

அந்தக் குறையை 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு வெளிவந்த சிவாஜி, விண்ணைத்தாண்டி வருவாயா, ராவணன் போன்ற படங்கள் சரிசெய்தன. இதற்கு அடுத்து வந்த Slumdog Millionaire, 127 hours, pele போன்ற படங்கள் ரஹ்மானை சர்வதேச அளவில் கொண்டுசென்றதில் முக்கியப் பங்காற்றின.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பீலே திரைப்படம். பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ரஹ்மானின் இசை படத்தில் முக்கியப் பங்காற்றியது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

தடைகளை உடை

இசை என்றால் ஒரு ஃபார்முலா இருக்கிறது. பாடல்களின் வரிகள் இலக்கியம் சார்ந்து இருக்க வேண்டும் என்ற கோட்பாடு தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி.

எம்.எஸ்.வி., இளையராஜா, சங்கர் கணேஷ் போன்ற பல இசையமைப்பாளர்களும் அந்த விதியைப் பின்பற்றியே இசையமைத்தார்கள். அந்த விதியை ரஹ்மான் உடைத்தார்; மிகவும் அழகான இலக்கியம் சாராத சொற்களை தனது பாடல்களில் பயன்படுத்தத் தொடங்கினார்.

சின்மயி, பென்னி தயாள், நரேஷ் ஐயர், உன்னிமேனன், சத்யா பிரகாஷ், உன்னி கிருஷ்ணன், ஹரிணி போன்ற பல புதிய குரல்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

பல புது இசைக்கருவிகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டுவந்தார். மெய்நிகர் வடிவமைப்பு (virtual reality) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

இசையோடு மட்டும் தன்னை நிறுத்திக்கொள்ளாத ஏ.ஆர். ரஹ்மான், Atkan Chatkan, 99 Songs என்ற இந்தி படங்களில் தயாரிப்பாளர், எழுத்தாளராகவும், le musk என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்தார்.

இசையை தன் உயிராக நினைத்த ரஹ்மான், இசைப்பள்ளி, இசைக் கல்லூரிகளை ஆரம்பித்து பல மாணவர்களுக்கு இசையை பயிற்றுவித்துவருகின்றார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

2010-க்குப் பிறகான ரஹ்மானின் இசை இதயத்திற்கு மிக நெருக்கமாக கொண்டுசெல்லவில்லை. மரியான், காவியத்தலைவன், அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களின் பாடல்கள் சிறப்பாக அமைந்தாலும், 90'ஸ் கிட்ஸ் மீண்டும் பழைய ரஹ்மானுக்காகக் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details