தமிழ்நாடு

tamil nadu

நிலத்தகராறு: தாத்தாவும் பேரனும் வெட்டிக்கொலை!

By

Published : Nov 5, 2020, 8:03 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் தாத்தாவும்; அவரது 10 வயது பேரனும் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தாத்தாவும் பேரனும் உயிரிழப்பு
தாத்தாவும் பேரனும் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (52). இவரது சகோதரர் சாம்ராஜ். இவர்களுக்கிடையே பல ஆண்டுகளாக நிலத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலத்தைப் பிரிப்பது சம்பந்தமாக நாளை(நவ.6) பேச்சுவார்த்தை நடக்க இருந்த நிலையில், இன்று (நவ.5) பெருமாள் தனது பேரன் சந்துரு(10) உடன் இருசக்கர வாகனத்தில் கொத்தக்கோட்டை அரசு பால் கொள்முதல் நிலையத்திற்கு பால் கொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் பெருமாளை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

தாத்தாவும் பேரனும் வெட்டிக்கொலை

இதனைப் பார்த்து தடுக்க முயன்ற அவரது 10 வயது பேரன் சந்துருவையும் தலை உள்ளிட்டப் பகுதிகளில், வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த சிறுவன் சந்துருவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், மருத்துவமனையில் சிறுவன் சந்துருவும் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிச்செல்வம் தலைமையிலான காவல் துறையினர் பெருமாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலைச் சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நிலத்தகராறில் முன் விரோதம் காரணமாக சொந்த அண்ணனை தம்பியே வெட்டி கொலை செய்தாரா? அல்லது அடியாட்கள் வைத்து கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மரம் விழுந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details