தமிழ்நாடு

tamil nadu

துருக்கி, சிரியாவை துரத்தும் அவலம் - மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

By

Published : Feb 21, 2023, 7:03 AM IST

மீளா துயரில் சிக்கி உள்ள துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

அங்காரா:துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தின.

கட்டடங்கள் குலுங்கி தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிக் கிடந்தவர்களின் உடல்கள் குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்டன. ஏறத்தாழ 45 ஆயிரம் பேர் இந்த பேரழிவில் உயிரிழந்தனர். இந்த மீளா துயரில் இருந்து வெளிவருவதற்குள் துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் உள்ள டெபன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கி - சிரியா எல்லை நகரில் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

ஹடாய் நகரில் பல்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் நில நடுக்கத்தில் இடிந்து தரைமட்டமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் துருக்கி உள்துறை அமைச்சர் சுலேமான் சுய்லு தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்பு படையினர் கூறினர். அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட பல்வேறு கட்டடங்கள் நில நடுக்கத்தால் இடிந்து தரைமட்டமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் நில நடுக்கம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் அங்கும் மீட்பு பணிகள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.

இதையும் படிங்க:இஸ்ரேலுக்கு சென்ற கேரள விவசாயி மாயம்!

ABOUT THE AUTHOR

...view details