தமிழ்நாடு

tamil nadu

Elephant Muthu Raj: 20 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பிய முத்துராஜா யானை!

By

Published : Jul 5, 2023, 11:20 AM IST

தாய்லாந்து அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய முத்துராஜா யானையின் உடல்நிலை மோசமானதால், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த யானை தாயகம் திரும்பியது.

Elephant
தாய்லாந்து

தாய்லாந்து:தாய்லாந்து அரச குடும்பத்திடம் இருந்த சக்சுரின் என்ற யானை, அதன் பத்து வயதில் கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. திருவிழாக்களில் சாமி சிலைகள் உள்ளிட்டவற்றை சுமந்து செல்லும் பயிற்சிக்காக சக்சுரின் உள்பட மொத்தம் மூன்று யானைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதில், சக்சுரின் யானை இலங்கையில் உள்ள புத்த மத கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்தது. இலங்கையில் சக்சுரின் யானையின் பெயர் 'முத்துராஜா'. இலங்கையில் முத்துராஜா யானை பல்வேறு மத விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் இருந்த முத்துராஜாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

தாய்லாந்தில் முத்துராஜா

இதனையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர், பல ஆண்டுகளால் தொடர்ந்து கடினமாக உழைத்து வருவதாலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும் முத்துராஜாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதற்கு உடனடியாக மருத்துவ உதவி தேவை என்றும் இலங்கை அரசிடம் தெரிவித்தனர். ஆனால், இலங்கை அரசு இதனை கவனத்தில் கொள்ளவில்லை.

தாயகம் திரும்பிய முத்துராஜா யானை

இதனைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு, யானை முத்துராஜாவின் நிலை குறித்து, இலங்கையில் உள்ள தாய்லாந்து தூதரகம் விசாரணை நடத்தியது. அதில், யானையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, யானை முத்துராஜாவை தாய்லாந்திற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என தாய்லாந்து அரசு கோரிய நிலையில், இலங்கை அரசும் அதற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, யானை புத்த மத கோயிலில் இருந்து இலங்கை தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு யானையின் உடல்நிலை தேறி வர ஆரம்பித்தது.

தாயகம் திரும்பிய முத்துராஜா யானை

இந்த நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி, முத்துராஜா யானை இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது. ரஷ்ய சரக்கு விமானம் மூலம் இலங்கையிலிருந்து தாய்லாந்தின் சியாங் மாய் மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், பாகன்கள், தொழில்முறை யானைப் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு, யானையை பாதுகாப்பாக தாய்லாந்திற்கு அழைத்து வந்தனர்.

தற்போது யானை லம்பாங் மாகாணத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது. 30 நாட்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ சிகிச்சைக்காகவே யானை மீட்டு வரப்பட்டுள்ளதாகவும், யானை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுமா என்பது குறித்து இலங்கை அரசுடன் ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாயகம் திரும்பிய முத்துராஜா யானை

அதேபோல், வெளிநாடுகளில் உள்ள மற்ற தாய்லாந்து யானைகளின் உடல் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக தாய்லாந்து யானைகளை ஏற்றுமதி செய்வது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர்.

இதையும் படிங்க: மயில் மீது பெண் புகார் - கர்நாடகாவில் அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details