தமிழ்நாடு

tamil nadu

G20 summit: "ஜி20 மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்காதது ஏமாற்றம்" - அமெரிக்க அதிபர் பைடன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 12:50 PM IST

ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காதது ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

President Biden
President Biden

அமெரிக்கா:அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட இருபது நாடுகள் ஜி20 கூட்டமைப்பில் உள்ளன.

இந்த ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், ஜி20 மாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது. ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

இதில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜி20 நாடுகளின் தலைவர்கள் வருகையை ஒட்டி டெல்லி முழுவதும் வரைபடங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 7ஆம் தேதி இந்தியாவுக்கு வருகைத் தர இருக்கிறார்.

பைடன் வரும் 8ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், மாநாட்டிற்கு வரும் மற்ற நாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், நேற்று(செப்.3) வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ஜி20 உச்சி மாநாட்டிற்கான தனது இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தெரிவித்தார். மேலும், சீன அதிபர் ஜின்பிங் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தியைக் கேட்டு ஏமாற்றம் அடைந்ததாகவும், இந்த மாநாட்டில் இல்லை என்றாலும் அவரை தான் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் பைடன் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்பு தொடர்பாக ஜி20 சிறப்பு செயலாளர் முக்தேஷ் பர்தேஷி கூறும்போது, "ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் வரவில்லை. அதனால், ஊடகங்களில் வெளியாகும் செய்தி குறித்து எதுவும் கூற முடியாது" என்றார்.

ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரேசில் அதிபர் லூயிஸ் சில்வா ஆகியோர் பங்கேற்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details