ETV Bharat / bharat

2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 6:33 PM IST

pm narendra modi: 2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்றும், ஊழல், சாதி, வகுப்புவாதம் ஆகியவற்றிற்கு நாட்டில் இடமிருக்காது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டெல்லி: ஜி20 கூட்டமைப்பில், இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா உள்ளிட்ட இருபது நாடுகள் உள்ளன. இந்த ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.

ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், ஜி20 மாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது. ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், மாநாட்டிற்காக வருகை தரவுள்ள தலைவர்களின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரதமர் நரேந்திரமோடி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "உலக நாடுகளின் பார்வை எப்போதும் ஜிடிபியை மையமாகக் கொண்டே இருக்கும். இது தற்போது மனிதர்களை மையப்படுத்தியதாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தில் இந்தியா ஒரு முக்கிய வினையூக்கியாக செயல்படுகிறது.

எதிர்காலத்தில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும். நாட்டின் பொருளாதாரம் பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்தில் ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் நிற்கும் அளவிலான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க இந்தியர்களுக்கு இன்று வாய்ப்பு உள்ளது. ஜி20-ல் இந்தியாவின் வார்த்தைகள் உலக நாடுகளால் வெறும் யோசனைகளாக பார்க்கப்படுவது அல்ல, எதிர்காலத்திற்கான ஒரு வரைபடமாக பார்க்கப்படுகின்றன.

இந்தியா நீண்ட காலமாக பல லட்சம் ஏழை மக்களைக் கொண்ட நாடாகக் காணப்பட்டது. ஆனால், இப்போது லட்சியம் கொண்ட பல லட்சம் இளைஞர்கள் மற்றும் பல லட்சம் திறமையான மக்களைக் கொண்ட நாடாகப் பார்க்கப்படுகிறது.

2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும். ஊழல், சாதி, வகுப்புவாதம் ஆகியவற்றிற்கு நம் நாட்டில் இடமிருக்காது. இந்தியா ஜி20 கூட்டமைப்பிற்கு தலைமை ஏற்ற பிறகு பல நேர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. காஷ்மீர் மட்டுமல்ல நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கூட்டங்கள் நடத்துவது இயல்பானதுதான், அதில் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்து மதத்தை கரோனாவோடு ஒப்பிட்டு பேசிய உதயநிதி.. பொங்கி எழுந்த வானதி சீனிவாசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.