கின்ஷாசா: மேற்கு காங்கோ ஆற்றில் ஏற்பட்ட படகு தீ விபத்தில், இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாகாண துணை அதிகாரி பாப்பி எபியானா தெரிவித்ததாவது, “காங்கோ ஆற்றில் நேற்று (அக்.23) படகு ஒன்று காங்கோவின் தலைநகரான கின்ஷாசாவின் கிழக்குப் பகுதியில் இருந்து, எம்பண்டாகா நகருக்கு எரிபொருட்களை ஏற்றிக் கொண்டுச் சென்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக அந்த படகு தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 11 நபர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படகில் பயணம் செய்த மேலும் பலருக்கு என்ன நிகழ்ந்தது என தெளிவாக தெரியவில்லை ”என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படகு விபத்து, இந்த வாரத்தில் மட்டும் 2வது விபத்து ஆகும். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதேபோல சுமார் 300 பேருடன் சென்ற படகு ஒன்று நடுவழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதாவது, அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்பட்டது. மேலும், அந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டு, 150க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வந்தனர்.
பொதுவாகவே காங்கோவில் போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், விலை குறைவு என்பதாலும், அப்பகுதியினர் நீர்வழிப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, குறைந்த அளவில் எடை ஏற்றிச் செல்லப்படும் தற்காலிகப் படகுகளே அப்பகுதியில் பயணம் செய்ய பயன்படுத்துகின்றன. ஆனால் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதும், போதிய பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களே அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிக் பாஸ் செட்டில் வைத்து போட்டியாளர் கைது.. பெங்களூருவில் நடந்தது என்ன?