தமிழ்நாடு

tamil nadu

வூஹானில் ஒரு கோடி பேருக்கு கரோனா டெஸ்ட் - அறிகுறியில்லாமல் 300 பேர் பாதிப்பு!

By

Published : Jun 3, 2020, 5:18 PM IST

Updated : Jun 3, 2020, 5:33 PM IST

பெய்ஜிங் : வூஹானில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், 300 பேர் அறிகுறியில்லாமல் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

wuhan
wuhan

சீனாவின் வூஹானில் தோன்றிய கரோனா வைரஸ், அங்கிருந்து கட்டுக்கடங்காமல் பரவி, உலகையே தன் கோரப் பிடியில் சிக்க வைத்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் பரவத் தொடங்கிய, இந்த நோய்க் காரணமாக உலகளவில் இதுவரை 61 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பலன் அளிக்காமல் மூன்று லட்சத்து 67 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளும்; இந்நோயின் தாக்கத்தால் திணறிவருகின்றன. கரோனாவைக் கட்டுப்படுத்த, உலக நாடுகளில் பொது ஊரடங்கு, பயணத் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், உலகப் பொருளாதாரமும் வரலாறு காணாத அளவிற்குச் சரிவைச் சந்தித்துவருகிறது.

இந்த வைரஸ் உலகையே ஸ்தம்பிக்கச் செய்துள்ள போதிலும், சீன அரசின் அதிரடி முன்னெச்சரிக்கை, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த ஏப்ரல் மாதமே அந்நாட்டில் வைரஸின் தாக்கம் பெருமளவு குறைந்தது. இந்நிலையில், கரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என சீன அரசு பெருமிதம் பேசி வந்த வேளையில், மே மாதம் வூஹான் மற்றும் சில பகுதிகளில் புது புது கரோனா தொற்றுகள் எழத் தொடங்கின.

இதையடுத்து, 1.11 கோடி மக்கள் தொகை கொண்ட வூஹான் நகரில் அனைவரையும் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கும் பெரும் முயற்சியில் சீன அரசு களமிறங்கியது. அதன்படி, 98 லட்சத்து 90 ஆயிரம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட, இந்த பிரமாண்ட சோதனையின் முடிவில் 300 பேர் அறிகுறியில்லாமல் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பரிசோதனை முடிவுகள், வெளிநாட்டு ஊடகங்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. வூஹானில் இதுவரை 50 ஆயிரத்து 340 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று ஆயிரத்து 869 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைப் பொறுத்தளவில், கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி 83 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், வெறும் 73 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டில் மொத்தம் நான்கு ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளதாக சீன சுகாதார ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : யார் ஏற்க மறுத்தாலும் அவர் கலைஞர்தான்...

Last Updated :Jun 3, 2020, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details