தமிழ்நாடு

tamil nadu

ஓய்ந்தது வாரிசு, துணிவு அலை… புதுப்‌பாய்ச்சலுக்கு தயாராகும் தமிழ் சினிமா?

By

Published : Feb 2, 2023, 5:37 PM IST

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் இருபெரும் ஆளுமைகளின் படங்கள் வெளியாகிய நிலையில் இம்மாதம் முதல் வழக்கமான திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.‌ அதுவும் இந்த வாரம் மட்டும் 7 படங்கள் வெளியாக உள்ளன.

ஓய்ந்தது வாரிசு, துணிவு அலை… புதுப்‌பாய்ச்சலுக்கு தயாராகும் தமிழ் சினிமா
ஓய்ந்தது வாரிசு, துணிவு அலை… புதுப்‌பாய்ச்சலுக்கு தயாராகும் தமிழ் சினிமா

சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறிப்பிட்ட 10 நடிகர்களின் படங்கள் தான் மக்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கும் படங்களாக உள்ளன. அதனால் இவர்களுக்கு மட்டுமே திரையுலகில் மார்க்கெட் உள்ளது. திரையரங்கு உரிமையாளர்களும் இத்தகைய படங்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். ஆனாலும் ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக சிறு தயாரிப்பு படங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றிற்கெல்லாம் மக்கள்‌ ஆதரவும் இல்லை, திரையரங்குகளும் கிடைப்பதில்லை. ஆனால், சினிமா மீதுள்ள ஆசையால் இத்தகைய திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறு பட்ஜெட் படங்களால் தான் ஏராளமான சினிமா தொழிலாளர்கள் பிழைத்து வருகின்றனர்.

இந்தாண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான அஜித் மற்றும் விஜய் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் வெளியாகின. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படமும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படமும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.11-ம் தேதி வெளியாகின. இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆனால், இவ்விரண்டு படங்களும் வெளியானதால் சிறு பட்ஜெட் படங்கள் எதுவும் இந்தப் பொங்கலுக்கு வெளியாகவில்லை. முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் வெளியானாலும் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகும்‌. பெரிய படங்களைப் பார்த்த ரசிகர்களும் இந்தப் படங்களையும் பார்ப்பார்கள்.

இதன்‌மூலம் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு குறைந்தபட்ச லாபமாவது கிடைக்கும். ஆனால், இப்போதோ தமிழ்நாட்டில் உள்ள 1000 திரையரங்குகளிலும் இந்த இரண்டு பெரிய படங்களையும் திரையிடுவதால் சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மாதம் கழித்து பிப்ரவரி மாதத்தில் ஒரே வாரத்தில் ஏராளமான படங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையை கொடுக்கிறது.

அப்படி இந்த வாரம் மட்டும் 7 படங்கள் வெளியாக உள்ளன. ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ரன் பேபி ரன்; யோகி பாபு நடித்துள்ள பொம்மை நாயகி; சந்தீப் கிஷன் நடிப்பில் மைக்கேல்; ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன்; சமுத்திரக்கனி, கதிர் நடித்த தலைக்கூத்தல், எஸ்ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள நான் கடவுள் இல்லை உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. அதில் பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படங்கள்தான்.

இதில் மைக்கேல் படத்திற்குத்தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள படம் என்பதாலும், ரெட் ஜெயன்ட் நிறுவனம் மறைமுகமாக வெளியிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரே நாளில் இவ்வளவு படங்கள் வெளியாவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை. ரசிகர்கள் பண்டிகைக்கு செலவு செய்து தற்போதே சம்பாதிக்கத் தொடங்கி இருப்பார்கள். அவர்கள், இந்த வாரம் படம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்ற மனநிலையில்தான் இருப்பார்கள்.

சிறிய பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்கும் மனநிலை ரசிகர்களிடம் எப்போதோ குறைந்து விட்டது. அதுவும் ஓடிடி தளங்களின் வரவுக்குப்‌ பிறகு மேலும் குறைந்துவிட்டது. பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். மற்றதெல்லாம் ஓடிடியிலோ, தமிழ் ராக்கர்ஸ் மூலமோ‌ பார்த்துவிடலாம் என்ற‌ மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

ஆனாலும், ஒவ்வொரு வாரமும் இப்படி குப்பையாக படங்கள் கொட்டப்படுவது குறைவதில்லை. இன்னும் கரோனா காலத்தில் தேங்கிய படங்களே வெளியாகாமல் உள்ளன. அந்தப் படங்கள் எல்லாம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டு இருக்கின்றன‌. இந்த வாரம் 7 படங்கள் அடுத்த வாரம் 5 படங்கள் என வாராவாரம் படங்கள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்குத்தான் ஆளில்லை என்பதே நிதர்சனம்.

ஓடிடி தளங்களும் சிறிய பட்ஜெட் படங்களைக் கண்டுகொள்வதில்லை. ஆரம்ப காலத்தில் சிறிய பட்ஜெட் படங்களின் நண்பன்‌ என்று கூறிக்கொண்டு வந்த ஓடிடி தளங்களை தற்போது சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் நெருங்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் கூட இதனை சமீபத்திய விழா ஒன்றில் வெளிப்படையாகப் பேசியேவிட்டார்.

இப்படி திரையரங்குகளும் ஓடிடி தளங்களும் சிறிய பட்ஜெட் படங்களை விரட்டி அடிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இப்படி எத்தனை பிரச்னைகள் சூழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய உத்வேகத்துடன் புதுப்பாய்ச்சலுடன் பயணிக்கிறது, தமிழ் சினிமா.

இதையும் படிங்க: நாட்டிலேயே முதன்முறையாக சென்னை விமானநிலையத்தில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details