தமிழ்நாடு

tamil nadu

சூரரைப் போற்று இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By

Published : Mar 22, 2023, 8:52 PM IST

அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள சூரரைப் போற்று திரைப்படம் இந்த வருடம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சூரரைப் போற்று இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூரரைப் போற்று இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கரோனா பரவல் காரணமாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று நேரடியாக வெளியானது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமான சூரரைப்போற்று ஓடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சூர்யாவின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆஸ்கர் விருது வரை சென்று சாதனைப் படைத்தது, சூரரைப்போற்று.

அது மட்டுமின்றி சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை சுதா கொங்கரா பெற்றார். சிறந்த திரைக்கதை காரணமாக இப்படம் பார்த்தவர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. சூர்யாவின் திரை வாழ்வில் மறக்க முடியாத படமாகவும் சூரரைப்போற்று திரைப்படம் அமைந்தது. காட்டுப்பயலே என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடித்த ரோலில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இந்தி பதிப்பையும் சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

தமிழில் பாடல்கள் வெற்றி பெற்றதுபோல் இந்தியிலும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபன்டன்சியா என்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அருணா பாட்டியா, ஜோதிகா, சூர்யா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்போது 'புரொடக்சன் 27' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த இந்தி திரைப்படம் எதிர் வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று ‌உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்பால் அக்சய் குமாரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இதனிடையே இந்தி திரையுலகில் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சூர்யா - ஜோதிகா தம்பதியர், தமிழில் சூரரைப்போற்று பெற்ற வெற்றியை விட பாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காஷ்மீரில் நிலநடுக்கம் - லியோ படக்குழுக்கு என்ன ஆச்சு..?

ABOUT THE AUTHOR

...view details