தமிழ்நாடு

tamil nadu

“நானும் உதயநிதியும் ஒரே வீட்டில் பொண்ணு எடுத்திருக்கோம்” சிங்கப்பூர் சலூன் பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி கலகல!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 6:09 PM IST

Singapore Salon: சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், நான் 45 வருடமாக சினிமாவில் இருக்க காரணம், சிகை அலங்காரம். அதை வைத்து தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். அந்த சிகை அலங்காரம் வைத்து படம் பண்ணுவது நன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

singapore salon movie trailer launch
ஆர்.ஜே.பாலாஜி

சென்னை:வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், கிஷன் தாஸ், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கே. ராஜன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆர்.ஜே பாலாஜி, “சிங்கப்பூர் சலூன் படம் ரிலீஸ்க்கு ரெடியாகி விட்டது. இந்த படத்தின் மூலம் எனக்கு பெரிய அனுபவம் கிடைத்தது. உடல்நிலை சரியில்லாத போதும் இப்படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இன்றைக்கு கிஷன் தாஸ் & ரோபோ சங்கர் இருவரின் ஜோடியாக நடித்தவர்களும் வந்திருக்கிறார்கள். ஆனால் என்னுடன் நடித்த ஹீரோயின் 2 பேரும் வரவில்லை. எனக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி சௌத்ரிக்கு வர நேரமில்லை.

விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். நான் கண் முன் பார்த்த ஜாவா சுந்தரேசன் நீங்கள் அவர் தான். இயக்குநர் லோகேஷ் இந்த படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணி கொடுத்தார். இந்த படத்தில் காசு எதுவும் வாங்காமல் பெரிய நடிகர் ஒருவர் நடித்து கொடுத்ததாக பேசியவர், நான் சத்தமாக பேசி டயலாக் வைத்து நடிக்கும் நடிகனாக இருந்த பாலாஜியை வேறு விதமாக, கதைக்கு ஏற்ப மாற்றியவர் இயக்குநர் கோகுல் தான். அது அப்போது கஷ்டமாக இருந்தது.

இந்த படத்தின் சலூன் செட்டுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாய் செலவானது. அதனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கெஸ்ட்டாக வந்திருந்தேன். அந்த படத்தை தயாரித்த போனி கபூர் தான் நான் நடித்த வீட்ல விசேஷம் படத்தையும் தயாரித்தார். நானும் உதய்யும் ஒரே வீட்டில் பொண்ணு எடுத்திருக்கோம் என்று சொன்னேன்.

காரணம் இரண்டு பேரும் ஒரே கம்பெனியில் படம் பண்ணிருக்கோம் என்பதை அப்படி சொன்னேன். உதயநிதியும் பேசும் போது அதே தான் சொன்னார். அந்த படத்தை குறிப்பிட்டு சொன்னார். ஆனால் அந்த 20 செகன்ட் வீடியோ கிளிப்பை சமூக வலைத்தளங்களில் போட்டு, என்னோட மனைவியும் அவருடைய மனைவியும் அக்கா தங்கச்சி. ஆர்.ஜே.பாலாஜி உழைப்பால் உயர்ந்தவர் என்று பார்த்தால், அவனும் அரசியல் பின்புலத்தால் தான் உயர்ந்தான்.

அதனால் தான் சிங்கப்பூர் சலூன் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்றெல்லாம் பேசப்படுகிறது. அடப்பாவிகளா... அந்த வீடியோவை 5 செகன்ட் கூட பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். இன்றைக்கு ரெட் ஜெயன்ட் மார்க்கெட் லீடர். நல்ல படங்களை தேடி வாங்குகிறார்கள். நான் அவருக்கு சகலபாடி இல்லை. நான் வானம்பாடி. ஒரு ஓரமாக பறக்கிறவன். நான் ஒருவன் படித்ததால் என்னை சுற்றி இருக்கும் 50 பேரின் வாழ்க்கையை மாற்ற முடிந்தது. அது 100, ஆயிரமாக மாறுகிறது. அதனால் படிப்பு ரொம்ப முக்கியம்” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நான் வந்தது புரமோஷனுக்கு தான். டைட்டில் ரொம்ப நன்றாக இருக்கிறது. பாலாஜியும் நானும் ரொம்ப நாள் முன்னாடியே படம் பண்ணுவது பற்றி பேசி இருக்கிறோம். யாரும் கான்ட்ரோவர்சியாக பேசவில்லை. ராஜன் சார் பேசுவார்னு பார்த்தால் அவரும் பேசவில்லை. அதனால் நான் பேசுகிறேன். இயக்குநர் கோகுல் ரொம்ப டார்ச்சர். அவருடன் வேலை செய்த 2 படமும் பெரிய அனுபவம்.

சத்யராஜ் மிகப்பெரிய நடிகர். நான் அவரை ரொம்ப ரசித்திருக்கிறேன். அவரை பார்ப்பது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. சத்யராஜ்ஜுக்கு சரிக்கு சமமாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பதும் தெரியும். ஆனால் அவருடன் சமமாக படம் பண்ண வேண்டும்” என்றும் கூறினார். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ், “ஆர்.ஜே பாலாஜியை ப்ரோ அப்படித்தான் கூப்பிடுவேன்.

நான் 45 வருடமாக சினிமாவில் இருக்க காரணம், சிகை அலங்காரம். அதை வைத்து தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். அந்த சிகை அலங்காரம் வைத்து படம் பண்ணுவது நன்றாக இருந்தது. சிங்கப்பூர் சலூன் படம் அவர் பண்ண படங்களை விட முக்கியமானது.‌ கூட நடித்தவர்கள் எல்லாரும் ஜாலியாக கலாய்த்து நடித்தோம். கவுண்டமணி, வடிவேலு, மணிவண்ணன் கூட காமெடி பண்ணிருக்கேன்.

ஆனால் நான் தனியாக காமெடி பண்ணது இந்த படத்தில் தான். நாகேஷை போல தனியாக காமெடி டயலாக் பேசி நடித்திருக்கிறேன். நான் கதாநாயகனாக நடிக்கும் போது கதாபாத்திரம் ரோல் வந்தால் கொஞ்சம் பயம் இருக்கும். ஆனால் இப்போது இல்லை. அந்த தைரியத்தை கொடுத்தது விஜய் சேதுபதி தான். மக்கள் செல்வன் பட்டம் கொடுத்தது சரியாக இருக்கிறது வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்ற பாடல் தான் விஜயகாந்த்துக்கு நிலைத்து இருக்கிறது.

முதல் படத்தில் நடித்தது போல இந்த படத்தை ரொம்ப எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த படத்திலும் ஒரு கதவு திறக்க காத்திருக்கிறேன்” என்று கூறினார். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ரோபோ சங்கர், “ஆர்ஜே பாலாஜியை நான் விஜய்னு சொல்லுவேன். அவர் என்னை அஜித்னு சொல்லுவார். கடந்த 1 வருடமாக எந்த படமும் நடிக்கவில்லை. 2024ல் இந்த படத்தில் நடிக்கிறேன். சத்யராஜ் பற்றி நிறைய பேசி இருக்கிறேன். அவருடன் ரொம்ப ஜாலியாக இந்த படம் பண்ணோம்” என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் கிஷன் தாஸ், “எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரசிகனாக இருந்து படம் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு நடிகனாக மேடையில் இருப்பது நன்றாக இருக்கிறது. சிரித்து சிரித்து ஜாலியாக படம் பண்ணோம். எனக்கு எப்பவுமே ரொம்ப பிடித்தது சத்யராஜ் தான். எனக்கு இந்த படத்தில் கிடைத்த பெரிய உறவு பாலாஜி அண்ணா தான்” என்று கூறினார்.

பின்னர் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், “விஜய் சேதுபதிக்கு நன்றி சொல்ல வேண்டும். குறிப்பிட்ட சிலரை விட தவிர மற்ற தயாரிப்பாளர்கள் நன்றாக இல்லை. விநியோகஸ்தர்கள் நன்றாக இல்லை என்றும், மருத்துவ செலவுக்கு கூட ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எல்லா நடிகர்களுக்கும் கடிதம் எழுதினேன். அப்போது ஐசரி கணேஷ் 5 லட்சம் ரூபாயை உடனடியாக கொடுத்தார்.

அந்த கடிதத்தை பார்த்து விட்டு விஜய் சேதுபதி 1 லட்சம் ரூபாயை ஆன்லைனில் அனுப்பினார். நேரில் கேட்டிருந்தால் இன்னமும் கூட அதிகமாக கொடுத்திருப்பார் என்று அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.எல் விஜய், “தமிழ் சினிமாவில் சத்யராஜின் பங்கு நிறைய இருக்க வேண்டும்.‌ அந்த மாதிரி நாம் பார்த்து கொள்ள வேண்டும். இந்த படத்தில் சத்யராஜ் சார் இருப்பது பெரிய பலம் என்று படம் வெளியான போது தெரியும்” என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய், “ரொம்ப நாட்களுக்கு பிறகு நிறைய காட்சிகள் இருக்கும்படியாக படம் வந்துள்ளது. என் முதல் படம் தலைவாசல் படத்தில் பண்ணும் போது இயக்குநர் செல்வாவிடம் எப்படி இருந்ததோ அதே மாதிரி அனுபவம் இருந்தது. சத்யராஜ் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்” என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஜான் விஜய், “ரொம்ப டிரண்டிங்கான ஆர்.ஜே என்றால் அது பாலாஜி நிச்சயமாக சொல்லலாம். அவர் படம் என்றால் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் போய் பார்ப்போம். பார்பர் என்ற சொல் மாதிரி ஹேர் ஸ்டைலிஸ்ட் என்ற வேறு ஒரு இமேஜ் கொடுக்கும் மாதிரியாக இந்த படம் இருக்கும்” என்றும் கூறினார். நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, “நடிகர் விஜயகாந்த் பற்றி சொல்லும் போது நல்ல மனிதர் என்று சொல்வார்கள்.

அந்த பெயர் தான் அவரை இறுதி ஊர்வலம் வரை கொண்டு சென்றது. விஜய் சேதுபதி என்றால் நல்ல மனிதர் என்ற பேர் வந்து கொண்டு இருக்கிறது. விஜயகாந்த் மாதிரி நல்ல மனிதர்” என்று கூறினார். நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “விஜய் சேதுபதி மற்றும் சத்யராஜ் ஆகிய இரண்டு பேரையும் ஹீரோவாக வைத்து இயக்குநராக கோகுலை போட்டு படம் பண்ணலாம். சிங்கப்பூர் சலூன் தியேட்டரில் ரிலீஸாகி ரசிகர்களுடன் பார்க்க வேண்டும்.

நான் எடுத்த படங்களில் எனக்கு ரொம்ப பிடித்த படம் இது. ஆர் ஜே பாலாஜி இந்த படத்தில் வேறு மாதிரியாக நடித்திருந்தார். இதில் சத்யராஜ் கலக்கி இருக்கிறார். அமைதிப்படை படத்தில் காமெடி பண்ணதை விட அதிகமாக பண்ணி இருக்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:25 ஆண்டை நிறைவு செய்யும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’.. எஸ்.எழில் கொண்டாட்ட விழாவிற்கு விஜய் வருகிறாரா?

ABOUT THE AUTHOR

...view details