தமிழ்நாடு

tamil nadu

தலகோதும் இளங்காத்து சேதி கொண்டுவரும்- தாலாட்டு தின வாழ்த்துக்கள் பிரதீப்குமார்

By

Published : May 12, 2022, 1:55 PM IST

Updated : May 12, 2022, 3:04 PM IST

“ கோடி அருவி கொட்டுதே அடி என்மேல” -  மயக்கும் குரலோன் பிரதீப்குமார் பிறந்தநாள்!

தலகோதும் இளங்காற்று சேதி கொண்டுவரும் என்று அவர் பாடிய பாடல் இன்று பலரது செல்போனிலும், அவர்களின் வீட்டில் உள்ள தொலைக்காட்சிகளிலும் ஒலிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தப் பாடலை நமக்கு கொடுத்த மயக்கும் குரலோன் பிரதீப் குமார் இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திரைப்படத்தை காட்டிலும் அந்தப் படத்தின் பாடல்கள்தான் முதலில் பெரிதாக விரும்பப்படும் ஒன்றாகும். படத்தின் கதை சரியில்லாமல் போனாலும் பாடல்களுக்காக பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

இதன் நீட்சியாக மறைந்த பாடகர் எஸ்.பி., பாலசுப்பிரமணியம், மறைந்த பாடகி சொர்ணலதா, இசைஞானி இளையராஜா, பாடகிகள் ஜானகி, சுசீலா என எண்ணிலடங்கா பாடகர்களின் பாடல்களையும் அவர்களது இசையையும் கொண்டாடுகின்றனர்.

தமிழ் பாடல் வரிகளையும், இசையமைப்பாளர்களின் இசையையும் உள்வாங்கி பாடலுக்கு உயிர் கொடுக்கும் பாடகர்கள்தான் இங்கு அதிகம் ரசிக்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் சில காலமாக தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத பாடல்கள் தந்த பாடகர் பிரதீப்குமாரின் 35ஆவது பிறந்தநாள் இன்று.

பிரதீப் பெரும்பாலும் சந்தோஷ் நாராயணன் மற்றும் சான் ரோல்டன் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். மூச்சைப் பிடித்து பாடி உணர்வை வெளிப்படுத்தும் பாடகர்கள் மத்தியில் பிரதீப்பின் குரல் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் அதன் பாணியிலேயே ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்கும்.

காதல் குறித்த மகிழ்ச்சிக்கான பாடல் என்றால் ஜிப்ஸி திரைப்படத்தில் வரக்கூடிய ‘காத்தெல்லாம் பூ மணக்க’ ஒரு சிறந்த உதாரணம் ஆகும். காதல் தோல்விக்கு காலா படத்தில் வரும் ‘கண்ணம்மா கண்ணம்மா’ நம் துவண்டு போன காதலை சற்று தூளியில் போட்டு தாலாட்டும் உணர்வை தந்து விட்டு போகும். துன்பங்களால் நிறைந்து இருக்கும் போது ஜெய்பீம் படத்தின் ‘ தல கோதும் இளங்காத்து’ வந்து நம் தலையை கோதி ஆறுதல் கூறும்.

காதலியின் காதலுக்காக ஏங்கும் காதலனின் தவிப்பை மரகத நாணயம் படத்தின் ‘முகம் காட்டு நீ, முழு வெண்பனி’ பாடலில் அழகாக காட்டியிருப்பார். நாம் அன்றாடம் கேட்கும் அற்புதமான பாடல்களை பிரதீப் குமார் தான் பாடியுள்ளார் என்பது தெரியாமலே ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

96 படத்தை ரசித்த ரசிகர்கள் கொண்டாட தவறிப்போன பாடல்தான் ‘இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே’ பாடல். இப்பாடலில் சின்மயியும், பிரதீப்பும் மிகவும் உருக்கமாக பாடியிருந்தார்கள். மேலும் இப்படத்தின் ‘வாடா என் வாழ்வை வாழவே’ Life of Ram பாடலில் ராம் எனும் கதாபாத்திரத்தின் எதார்த்த குரலை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

இசையமைப்பாளர் அவதாரம்:வாழ்வின் எல்லா உணர்ச்சிகளையும் பாடலாக கொடுக்கும் பிரதீப் குமார் சமீபத்தில் வெளியான குதிரைவால் படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் அவரின் இசை முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது.

மேலும் இந்தப் படத்தின் பறந்துபோகின்றேன் சிறகில்லாமல் பாடல் சிறந்த உணர்வைத்தரும். தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றி பாடல்களை கொடுத்த பிரதீப் குமாரை தமிழ் ரசிகர்கள் பெரும்பாலும் கொண்டாடவில்லை என்பதே உண்மை. பிரதீப்குமார் யாரென்று தெரியாதவரும் இவரின் பாடலால் ஈர்க்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். தாலாட்டு தின வாழ்த்துகள் பிரதீப் குமார்.

இதையும் படிங்க:'ஒன்றியத்தின் தப்பால்லே..., ஒன்னுமில்லே இப்பால்லே...!' - அரசியல் பாட்டுப்பாடிய ஆண்டவர்

Last Updated :May 12, 2022, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details