தமிழ்நாடு

tamil nadu

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு - த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்பட திரைப்பிரபலங்கள் கடும் கண்டனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 8:54 AM IST

Mansoor Ali khan: சினிமாவில் பாலியல் வன்கொடுமை காட்சிகள் தொடர்பான நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Lokesh Kanagaraj reacts Mansoor Ali khan words about Trisha
மன்சூர் அலிகான் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்

சென்னை:தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வில்லனாக நடித்து வருபவர், மன்சூர் அலிகான். சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், லோகேஷ் கனகராஜை விமர்சித்து வந்தார். அவ்வப்போது கிடைக்கும் மேடைகளில் தனக்கே உரிய பாணியில் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் பேசி, பல சர்ச்சைகளில் சிக்கியவர், மன்சூர் அலிகான்.

அதேபோல், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மன்சூர் அலிகான், பாலியல் ரீதியாக விரும்பத்தகாத வகையில் நடிகை த்ரிஷா குறித்து பேசியிருந்தார். இதற்கு நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டணம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நடிகை த்ரிஷா தனது X தளத்தில், “மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்றை பார்த்தேன். இதனை வன்மையாக நான் கண்டிக்கிறேன். பாலியல் ரீதியாகவும், ஆணாதிக்க மனநிலையிலும், அவமரியாதை செய்யும் விதமாக, பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் மோசமான ஒன்றாக இது இருக்கிறது.

மேலும் அவர் என்னுடன் திரையில் இணைந்து நடிக்க விரும்பலாம், ஆனால் நான், இதுவரை இது போன்ற ஒரு நபருடன் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு மேலும் எனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. இவர்களை போன்றவர்களால்தான் ஒட்டுமொத்த மனித குலத்துக்கே அவப் பெயர்” என்று காட்டமாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும், த்ரிஷாவின் இந்த பதிவை ரிட்வீட் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர், “மன்சூர் அலிகான் பேசியதைக் கேட்டு நான் மனமுடைந்தேன். அது என்னை கொதிப்படையச் செய்துள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நாங்கள் அனைவரும் ஒரே அணியாக பணியாற்றியவர்கள். எந்த துறையாக இருந்தாலும் பெண்கள், சக கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இதை சமசரசம் செய்து கொள்ள முடியாது. அவரது இந்த பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், மன்சூர் அலிகானின் பேச்சிற்கு நடிகை மாளவிகா மோகனனும் தனது X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “இந்த பேச்சு மிகவும் அருவருக்கதக்கது. இந்த நபர் பெண்களை இப்படித்தான் பார்க்கிறார் மற்றும் சிந்திக்கிறார் என்பதே வெட்கக்கேடானது. பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு துணிவு இருக்கிறதே? அவமானம். மிகவும் இழிவான செயல்" என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி, மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிஙக:எதற்காக நடிகர் ரஜினியின் பேரனுக்கு அபராதம்! முழுத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details