தமிழ்நாடு

tamil nadu

“அந்த ஒருமாத கால அவகாசம்தான்”.. கள்ளழகர் படத்தில் விஜயகாந்த் மூலம் சோனு சூட் அறிமுகமானது எப்படி?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 7:41 PM IST

Actor Sonu Sood Condolence: பாலிவுட் நடிகர் சோனுசூட் நடிகர் விஜயகாந்த் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளழகர் திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் சோனுசூட்
கள்ளழகர் திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் சோனுசூட்

சென்னை:திரைப்பட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று முன்தினம் (டிச.26) இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிச.28) காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார்.

இதனை அடுத்து, தற்போது சென்னை தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது உயிரிழப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது இரங்கலை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய முதல் படமான கள்ளழகர், விஜயகாந்த் கொடுத்த பரிசு. என்னுடைய இந்த ஸ்டில் அவர் கண்ணில் பட்ட சிறிது நேரத்திலேயே, நான் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். என் திரைப் பயணத்தை அவருக்காக அர்ப்பணிக்கிறேன். உங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணுவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

விஜயகாந்த கண்ணில்பட்ட சோனு சூட் புகைப்படம்: 1998ஆம் ஆண்டு விஜயகாந்த், சோனு சூட்-இன் புகைப்படத்தைப் பார்த்து, கள்ளழகர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த படமே நடிகர் சோனுவின் திரைவாழ்வின் வளர்ச்சிக்கு அடிகோலியது. இதில் செளமிய நாராயணன் என்ற கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்திருப்பார்.

அதிலும், கள்ளழகர் படத்தின் கிளைமேக்ஸில் நடிகர் விஜயகாந்திற்கும், சோனுவிற்கும் சண்டைக்காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். இந்த சண்டைக்காட்சிக்காக சோனு, தனது உடலை கட்டமைக்க பயிற்சி தேவை, அதற்கு ஒரு மாதகால அவகாசம் தேவை என்று கேட்டுள்ளார். எனவே, விஜயகாந்த் உடனே படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். இது குறித்து சோனு, அன்று நான் பயிற்சி பெறுவதற்காக, தனக்கு கால அவகாசம் கொடுத்து படப்பிடிப்பையும் நிறுத்தினார். அவர் செய்த காரியத்தால் நான் இன்று பிரபலமான நடிகராக இருக்கிறேன். அவருக்கு நான் என்றும் கடமைபட்டிருக்கிறேன் என்று கூறி உள்ளார்.

இதையும் படிங்க:கேப்டன் விஜயகாந்த் மறைவு; கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான நட்சத்திரங்களின் உருக்கமான பதிவு!

ABOUT THE AUTHOR

...view details