சென்னை:நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள 'அடியே' படத்தில் நடிகை கவுரி கிஷன் ஜோடியாக நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரையில் வெளியாகிறது.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 20) படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகை கௌரி கிஷன், இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, “இப்படத்தில் எனக்கு எல்லா இடத்திலும் சுலபமாக இருந்தது. ஜிவி எப்போதுமே பாஸிடிவ் மனிதர். பாடல்கள் நன்றாக வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா பாடல் பாடியுள்ளார். அவருக்கு நன்றி” என்றார்.
நடிகை கௌரி கிஷன் பேசும்போது, “ 'அடியே' எனக்கு மிக முக்கியமான படம். வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்தியன் சினிமாவில் இது மிகவும் வித்தியாசமான படம். ஒத்துழைப்பு அளித்து அனைவருக்கும் நன்றி. என் வாழ்வில் அதுவும் எதிர்பாராமல் நடந்துள்ளது. அடியே பட வாய்ப்பும் அப்படித்தான். ஜிவியின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கான மைல்ஸ்டோனாக இது இருக்கும் என்று பார்க்கிறேன். வெங்கட் பிரபு நடித்துள்ளார். ஆனால் எனக்கு அவருடனான காட்சிகள் இல்லை. அவர் அருமையாக நடித்துள்ளார். இருவேறு விதமான கதாபாத்திரங்கள் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் அதற்கு நிறைய பயிற்சி எடுக்க வேண்டி இருந்தது. குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது” என்று பேசினார்.