தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை எளிதில் கணிக்க முடியாது என்று சொல்லலாம். ஒரு படத்தை ஏன் ஓட வைக்கின்றனர். ஏன் கொண்டாடுகின்றனர் என்று யாருக்குமே தெரியாது. இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஆனால் சமூக வலைத்தளங்களின் ஆட்சி இல்லாமல் சுதந்திரமாகப் படம் பார்த்து ரசித்த, கொண்டாடிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் 90களின் காலகட்டம். தமிழ் சினிமாவின் உண்மையான பொற்காலம் என்று சொல்லலாம்.
தமிழ் சினிமா ரசிகர்கள் எந்த படத்தையும் தோல்வியடைய வைத்தது கிடையாது. அது மோசமான படமாக இருந்தாலும், ஏதோ ஒன்று பிடித்துப் போனால் அந்த படத்தையும் வெற்றிப் படமாக மாற்றிவிடும் நல்லவர்கள். இப்படி இருந்த பொற்காலத்தில் ஒரு படம் வெளியாகிறது. கதையாகப் பார்த்தால் ஒன்றுமில்லையே என்று தோன்றும். ஆனால் திரையரங்கில் சக்கை போடு போட்ட படம் தான் சின்னத்தம்பி.
1991ம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வெளியான இப்படம் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டது. இப்படத்தை இயக்கியவர் பி.வாசு. இதற்கு முன்னதாக பாரதி வாசு என்ற பெயரில் பல படங்களை இயக்கியவர்கள். பாரதி வாசு இந்த பெயரில் பாரதி யார் தெரியுமா? கமல்ஹாசன் நடித்த பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் மற்றும் நடிகர் சந்தான பாரதி தான். சந்தான பாரதியும் பி.வாசுவும் சேர்ந்து பல படங்களை இயக்கியுள்ளனர். அதன் பிறகு இருவரும் பிரிந்து தனித்தனியாகப் படங்களை இயக்கி வந்தனர்.
அதனை தொடர்ந்து சத்யராஜ் நடிப்பில் நடிகன் படத்தை தொடர்ந்து பி.வாசு இயக்கிய படம் தான் சின்னத்தம்பி. பிரபு, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, ராதாரவி என ஒரு வெற்றிப் படத்துக்கு உண்டான அத்தனை நடிகர் பட்டாளமும் இணைந்த படம் தான் சின்னத்தம்பி. படத்தின் இசையமைப்பாளர் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. 90களில் இசை என்றாலே அது இளையராஜா தான். அப்பா இல்லாமல் அம்மாவுடன் வாழ்ந்து வரும் சின்னத்தம்பி சின்ன வயதிலிருந்தே நன்றாகப் பாட்டுப் பாடும் திறமை கொண்டவன்.
அந்த ஊர் செல்வந்தர் செல்ல தங்கச்சி சின்னத்தம்பியின் வெகுளித்தனத்தைப் பார்த்து காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் தாலியும் கட்டிவிடுகிறார். இது நாயகியின் அண்ணன்களுக்குத் தெரிய வரப் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பது தான் சின்னத்தம்பி படத்தின் கதை.
கதையாகப் பார்த்தால் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த கதையில் ஒரு வெற்றிப் படத்துக்கு தேவையான அத்தனை மசாலாவையும் சரியான விதத்தில் கலந்து கொடுத்திருப்பார் இயக்குநர் பி.வாசு. நந்தினியாக குஷ்பு வேற லெவல் நடிப்பைக் கொடுத்திருப்பார். படம் வந்த பிறகு குஷ்பு எங்குச் சென்றாலும் அவரை சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டனர். சில ரசிகர்களோ ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இப்படி வெறிகொண்ட ரசிகர்களை குஷ்பூவுக்கு இப்படம் பெற்றுத் தந்தது.
அத்தனை கருத்துள்ள பாடல்களை அழகாகப் பாடும் சின்னதம்பிக்குத் தாலி என்றால் என்ன என்றே தெரியாது என்பது எப்படி என்றெல்லாம் இப்போது பார்க்கும் போது நமக்கு கேள்வி எழலாம். ஆனால் அப்போது அதை எல்லாம் மறக்க வைத்தது அருமையான திரைக்கதை. இப்போது டிவியில் சின்னத்தம்பி படம் போட்டால் நமக்கே தெரியாமல் முழு படத்தையும் பார்த்துவிட்டுத் தான் மற்ற வேலையைப் பார்ப்போம்.
கைதேர்ந்த நடிகர்கள், முத்தான பாடல்கள் மற்றும் பின்னணி இசை, அப்போது காமெடியில் கொடி கட்டிப் பறந்த காமெடி நடிகர், மனதை நெகிழ வைக்கும் சென்டிமென்ட் காட்சிகள் என அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்தது. இதன் காரணமாகவே கிட்டத்தட்ட ஒரு வருட காலம் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. இதன் வெற்றியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பி.வாசு ரஜினிகாந்த்தை வைத்து மன்னன் என்ற படத்தை இயக்கினார்.
அந்த படத்தில் சின்னத்தம்பி ஓடும் திரையரங்கில் சென்று ரஜினியும், கவுண்டமணியும் ரகளை செய்வார்கள். அந்த காமெடியும் மிகவும் ரசிக்கப்பட்டது. இதுவே சின்னத்தம்பி படத்தின் வெற்றிக்கு சான்று. இந்த படத்தில் மற்றொரு அம்சம் என்னவென்றால் பிரபு, குஷ்பூ ஜோடி ரசிகர்கள் மனதை கவர்ந்தது. இளையராஜா இசை தாண்டவம் ஆடியிருப்பார். போவோமா ஊர்கோலம், தூளியிலே ஆட வந்த, குயில புடுச்சு, உச்சந்தலை உச்சியிலே, அரச்ச சந்தனம், நீ எங்கே என் அன்பே என அத்தனை பாடல்களுமே இப்போது வரைக்கும் அனைவரின் விருப்ப பட்டியலில் உள்ளது.
சின்னத்தம்பி படத்தில் இளையராஜாவின் இசை குறித்து இயக்குநர் பி.வாசு ஒரு பேட்டியில், குயில புடிச்சு பாட்டு முடிந்த பிறகு பிரபுவுக்கு குஷ்பு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார். இதைப் பார்த்த அண்ணன்கள் குஷ்புவை அடிக்கும் போது கீழே விழுந்த அவரது கழுத்திலிருந்த தாலி வெளியே தெரிந்துவிடும். ஆனால் இளையராஜா அந்த இடத்தில் மியூசிக் எதுவும் போடாமல் அமைதியாக விட்டுவிட்டார். நான் போய் அவரிடம் கேட்டேன். ’நீ சும்மா இரு எதுவும் போட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.
நான், இல்லணே இதுதான் படத்தோட முக்கியமான காட்சி தாலியை அண்ணன்கள் பாத்துட்டாங்க இங்க பெரிய மியூசிக் வேண்டுமே என்றேன். அவர் அமைதியாக இரு என்று சென்றுவிட்டார். படம் பார்த்தபோது அந்த காட்சியில் தாலி வெளியே தெரிந்ததைப் பார்த்து ரசிகர்கள் எல்லாருமே உச்சு கொட்டினர். அதன் பிறகு இளையராஜாவிடம் சென்று கேட்டேன். ஏன் அங்கே மியூசிக் போடவில்லை என்று. அப்போது அவர் நான் மியூசிக் போட்டு இருந்தார் ரசிகர்களின் உச்சு சத்தம் கேட்டிருக்காது என்றார்.
இப்படி இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் இசையும் அத்தனை அற்புதமாக இருக்கும். அது மட்டுமின்றி இந்த படத்தில் வரும் அத்தனை பாடல்களையும் வெறும் 35 நிமிடங்களில் இசையமைத்தாராம் இளையராஜா. இப்படி இந்த படத்தை பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இன்றுடன் சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இப்போதும் சலிக்காத படமாக இருப்பது தான் இப்படத்தின் வெற்றி. இந்த படத்துக்கு பிறகு பிரபு மற்றும் குஷ்பு இருவரும் தமிழ் சினிமாவில் வெற்றி ஜோடியாக ஒரு வலம் வந்தார்கள்.
32 ஆண்டுகளை கடந்த 90ஸ் தமிழ் சினிமா கிளாசிக் ‘சின்னத்தம்பி’ இப்படத்தின் 32வது ஆண்டு கொண்டாட்டத்தை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ’என்னால் நம்ப முடியவில்லை சின்னத்தம்பி வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. பி.வாசு, பிரபு உங்களுக்காக என் இதயம் எப்போதும் துடித்துக்கொண்டு இருக்கும். மனதை உருக்கும் இசையை கொடுத்த இளையராஜாவுக்கு நன்றி. எல்லோரது இதயத்திலும் மனதிலும் நந்தினி பொறிக்கப்பட்டிருக்கிறாள் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். இனி தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஒரு படம் வருவது சாத்தியமே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது.
இதையும் படிங்க: அயோத்தி திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்