தமிழ்நாடு

tamil nadu

கராத்தே சாகசம் செய்த மாணவர் தீயில் கருகிய சோகம்!

By

Published : Aug 20, 2021, 4:13 PM IST

கராத்தே வீரர் பாலாஜி
கராத்தே வீரர் பாலாஜி ()

கராத்தே மாணவர் சாகசம் செய்யும்போது, உடலில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை: கராத்தே மாணவர் சாகசம் செய்யும்போது, உடலில் தீப்பற்றி எரிந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கு நான்காம் வீதியில் அமைந்துள்ள சிங்கமுத்து அய்யனார் கோயில் அருகேயுள்ள மைதானத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கராத்தே வீரர்களுக்கான சாகச விழா நடைபெற்றது.

இதில் முக்கிய பிரமுகர்கள், அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாகசத்தை கண்டுகளித்தனர். அப்போது கராத்தே பிரிவில் பல்வேறு சாகசங்கள் நடைபெற்றன.

கராத்தே சாகசம்

இதில் பங்கேற்ற பாலாஜி (19) என்ற கராத்தே மாணவர், கைகளில் துணியைக் கட்டிக்கொண்டு, அதில் மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி, வேறு மாணவர்கள் கையில் இருக்கும் ஓடுகளை உடைக்கும் சாகசத்தை நிகழ்த்தினார்.

இந்த சமயத்தில் மைதானப் பகுதியில் பலத்த காற்று வீசியது. இந்த சூழல், பாலாஜியில் கைகளில் பற்றிக் கொண்டிருந்த தீயை அவர் உடல் முழுவதிலும் பரவச் செய்தது. இதனை எதிர்பார்த்திராத பார்வையாளர்களும், பங்கேற்பாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

தீ விபத்து

உடனடியாக இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், விரைந்து சென்று பாலாஜியின் உடலில் பரவிய தீயை அணைத்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், பாலாஜி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, 108 அவசர ஊர்தி மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

கராத்தே சாகசம் செய்த மாணவர் தீயில் கருகிய சோக காட்சி

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) காலை, சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையறிந்த ஊர்மக்களும், மாணவரின் குடும்பத்தாரும் கதறி அழுதனர்.

யூடியூபர் பாலாஜி

வடக்கு ராஜவீதியில் வசித்துவந்த பாலாஜி, தேர்ந்த கராத்தே மற்றும் நடனம் கலைஞர் எனக்கூறும் ஊர் மக்கள், தனக்கு தெரிந்த கலை பிறருக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவர் தனியாக யூடியூப் பக்கம் ஒன்றை நிர்வகித்து, அதில் தனக்கு தெரிந்த கலை நுணுக்கங்களை பகிர்ந்து வந்ததாகவும் அவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details