தமிழ்நாடு

tamil nadu

வீட்டிற்கே சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர் - மாணவர்கள் உற்சாகம்

By

Published : Sep 20, 2021, 4:47 PM IST

மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்

கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர் குறித்த சிறப்பு தொகுப்பு

வேலூர்: கரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துப் பள்ளிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. இணையதளம் வழியாக மட்டுமே பாடம் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அதிலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஏனைய வகுப்புகளுக்கு இணைய வழியிலேயே கற்பித்தல் தொடர்கிறது.

இப்படியாக ஒருபுறம் இருக்க, தான் மாணவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று கரோனா விதிமுறைகளை பின்பற்றி பாடம் கற்பித்து வருகிறார் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர். வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த ஜமால்புரம் கிராமத்தில் 5ஆம் வகுப்புவரை உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவர், மாணவர்களிடம் இருக்கக்கூடிய தனித்திறமைகளை கண்டறிந்து, முறையே மாணவர்களை செதுக்கி வருகிறார்.

தனது பள்ளி மாணவர்களின் கல்வியும், கற்றல் திறனும், தனித்திறனும் பாதிக்கக்கூடாது என எண்ணி "நடமாடும் வகுப்பை" நடத்த முடிவு செய்தார். இதற்காக தன்னிடம் பயிலும் மாணவர்களின் பொற்றோர்களை அழைத்துப் பேசி மாணவர்களின் நிலை குறித்து எடுத்துக் கூறியபோது பொற்றோர்களும் ஆதரவளித்துள்ளனர். செல்ஃபோன் இணைய வசதி பெற்ற மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக பாடங்களை நடத்தி வருகிறார். இணைய வசதி இல்லாத மாணவர்களுக்குத் தானே வீட்டிற்கு நேரடியாக சென்று ஒலிபெருக்கி உதவியுடன் பாடம் எடுத்து வருகிறார்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்

தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிந்து, தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்களுக்கும் முகக்கவசத்தை கொடுத்து, மாணவர்கள் வீட்டிற்கு உள்ளேயும், இவர் வீட்டிற்கு வெளியேயும் என சமூக இடைவெளியை கடைபிடித்து பாடம் எடுத்து வருகிறார். அதேபோல வாரம் ஒரு முறை கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடங்களை மாணவர்கள் செய்துள்ளார்களா என்றும் ஆய்வு செய்து வருகிறார்.

கடந்த சுதந்திர தினத்தையொட்டி இணையதளம் மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் வீட்டிற்கே சென்று பரிசுகளை வழங்கியுள்ளார். எந்த வகையிலும் கல்வி மீது மாணவர்களுக்கு உள்ள தாகம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் இவரின் அர்ப்பணிப்பான ஆசிரியர் பணியை பாராட்டும் வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் "நல்லாசிரியர் விருது" இவருக்கு கிடைத்தது. இவர், இளம் வயதிலேயே நல்லாசிரியர் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்கே சென்று பாடம்

இது குறித்து ஆசிரியர் சக்திவேல் கூறுகையில், "ஒவ்வொரு அரசுப் பள்ளியில் படிக்க கூடிய மாணவர்களும் வகுப்பறைக்குள் நுழையும்போது கம்பளிப் பூச்சிகளாக நுழைகின்றனர். ஆனால், பிற்காலத்தில் கட்டாயம் வண்ணத்துப் பூச்சிகளாக சிறகடித்துப் பறப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நான் மாணவர்களோடு, மாணவனாக இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது என் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். பல்வேறு திறமைகளைக் கொண்ட மாணவர்களுக்குக் கரோனா காலத்தில் எப்படி வகுப்பு எடுக்கலாம் என யோசித்தபோது இணைய வழியில் மாணவர்களை முதலில் தொடர்பு கொண்டேன்.

அவ்வாறு இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது தான் "நடமாடும் வகுப்பு" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வகுப்புகள் எடுக்க தொடங்கினேன். நடமாடும் வகுப்பிற்கு மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

உறவுக்காரரான ஆசிரியர்

கரோனா காலத்தில் வகுப்பறைகள் மூடப்பட்ட நிலையில் கம்பி பந்தலை வீடுதோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் "வீடெல்லாம் கம்பி பந்தல்" என்ற முறையை அறிமுகப்படுத்தினேன். ஆசிரியர் என்பவர் வகுப்பறையில் மட்டுமல்ல, வீட்டிலும் இருப்பார் என்ற மனப்பான்மையையும், ஒவ்வொரு முறை நான் வீட்டிற்குச் செல்லும்போது ஆசிரியர் நம்முடைய உறவுக்காரர் என்பதை மாணவர்கள் மனதில் விதைத்தேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் எந்தவித போட்டியானாலும் ஜமால்புரம் பள்ளியில் பயிலும் இந்த மாணவர்களே முதல் பரிசை பெறுவார்கள். அது மட்டுமின்றி ஒட்டு மொத்த சாம்பியன் பரிசையும் பெறுவதும் எங்கள் பள்ளி மாணவர்கள்தான். மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற்று பரிசினை பெற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்

நான் இது போன்ற முயற்சிகள் எடுத்து மாணவனோடு மாணவனாக கலந்து பயணிக்க எனக்கு ஊக்கமாக இருந்தவர் எனக்கு ஒன்றாம் வகுப்பு எடுத்த ஆசிரியர், என்னுடைய அம்மாவான ஜி. சுலோச்சனா. நான் வெற்றி பெறவும், என்னுடைய மாணவர்கள் வெற்றி பெறவும் என்னுடைய அம்மாவே எனக்கு முன்மாதிரியாக இருந்தார். என்னுடைய நல்லாசிரியர் விருதுக்குக் காரணம் எனக்கு சம்பளம் பெற்றுத்தரும் என்னுடைய மாணவ செல்வங்களே.

மாணவர்களின் உற்சாக உரை

நான் குடிமை பணியாளராக வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என்னால் ஆக முடியவில்லை என்பதால் என்னிடம் பயிலக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்கள் அப்பணிகளுக்கான தேர்வில் வெற்றிப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு தற்போதிருந்தே மாணவர்களுக்கு "நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்" என்ற பயிற்சியை ஓ.எம்.ஆர் ஷீட் மூலமாக அளித்து வருகிறேன். எங்கள் மாணவர்களின் வெற்றியே என்னுடைய வெற்றியாக நான் கருதுகிறேன்” என்றார் புன்னகையுடன்.

இது குறித்து அப்பள்ளி நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகளான நாகஸ்ரீ, பிரியங்கா கூறுகையில், “எங்க சக்திவேல் சார் பாடத்தை பாட்டாக படிச்சி கற்றுக் கொடுப்பார். எங்களுக்காக போட்டி வைத்து, எங்களுடைய விருப்பத்துடன் அதில் எங்களை பங்கேற்க செய்வார். கரோனா காலத்தில் வீட்டிற்கே வந்து சொல்லிக் கொடுப்பது எங்களுக்கு நிம்மதியாக உள்ளது” என்கின்றனர்.

இதையும் படிங்க:வீதியில் கல்வி கற்கும் பழங்குடி மாணவர்கள்: மேற்கு வங்க ஆசிரியரின் புது முயற்சி

ABOUT THE AUTHOR

...view details