தமிழ்நாடு

tamil nadu

’ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்பது சர்வாதிகாரம்’- ப. சிதம்பரம்

By

Published : Feb 17, 2022, 1:40 PM IST

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்பது சர்வாதிகாரத்தில் தான் போய் முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பா. சிதம்பரம்
பா. சிதம்பரம்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி வரகனேரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “அரசியல் சாசனத்தை மதிக்காமல் ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்து வந்தார்கள். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் கூறுகின்றனர்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என கூறியது. கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது.

அந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சார மேடையிலேயே நின்று கொண்டு திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பேசுவது என்ன நியாயம். கரோனா நிவாரண நிதி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

’ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்பது சர்வாதிகாரம்’- ப. சிதம்பரம்

சினிமாவில் தான் ஒரு நாள் முதலமைச்சரெல்லாம் இருப்பார்கள். நிஜத்தில் அப்படி இருக்க முடியாது. ஐந்தாண்டு கால ஆட்சியில் அரசுக்கு நிதி ஆதாரங்கள் திரட்டி தான் ஒவ்வொரு திட்டங்களை செயல்படுத்த முடியும். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அரசுக்கு அதிக அளவிலான நிதி ஆதாரங்கள் கிடைத்தால் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்படாதவையும் திமுக அரசு நிறைவேற்றும்.

27 அம்மாவாசையில் தேர்தல் வரும் என ஈபிஎஸ் கிளி ஜோசியம் கூறுகிறார். அவர் அரசியலமைப்பு சட்டத்தை படித்து பார்க்க வேண்டும். ஒரு அரசுக்கு ஐந்தாண்டுகள் ஆயுள் காலம் உள்ளது. அரசை யாரும் முடக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர்கள் இது போல் பேசுவது தவறு.

திமுக அரசு ஐந்தாண்டுகள் நிச்சயம் முழுமையாக இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற பாஜகவின் குரலை தான் அதிமுக தற்போது பேசுகிறது. தமிழ்நாட்டில் பாஜக வின் பிரித்தாளும் சூழ்ச்சி எப்போதும் எடுபடாது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்பது சர்வாதிகாரத்தில் தான் போய் முடியும். இது குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் மதுரையை கலக்கும் ’மாஸ்டர்’ விஜய்

ABOUT THE AUTHOR

...view details