தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு விரைந்தது 2-வது கப்பல்

By

Published : Jun 22, 2022, 2:11 PM IST

தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு 2-வது கப்பல் புறப்பட்டு சென்றது.

நிவாரணம்
நிவாரணம்

தூத்துக்குடி:இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் 10,000 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 30,000 டன் அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்காக 30,000 டன் அரிசி தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு தனியார் குடோனில் வைத்து பொட்டலமிடும் பணி நடந்து வந்தது.

அதே போன்று, 250 டன் எடையுள்ள பால்பவுடர், சுமார் 50 டன் எடையுள்ள மருந்து பொருட்களும் கொண்டு வரப்பட்டு, அனைத்தும் முறையாக பொட்டலமிடப்பட்டு உள்ளன. பின்னர், தூத்துக்குடி துறைமுக சரக்கு கப்பலில் இலங்கைக்கு அனுப்ப தயாராக இருந்த கப்பல் அத்தியாவசிய பொருட்களுடன் இன்று (ஜூன்22) கிளம்பியது.

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு நிவாரண பொருட்கள்

இக்கப்பலை உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நிவாரண பொருட்களான, 14,700 ஆயிரம் டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மொத்தம் 15 ஆயிரம் டன் 67.7கோடி மதிப்பில் நிவாரண பொருட்களுடன் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள VTC SUN என்ற சரக்கு கப்பல் மூலம் புறப்பட்டு சென்றது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில தினங்களில் மற்றொரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், வஉசி துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன், மறுவாழ்வு துறை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப்பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய குழு அமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details