தமிழ்நாடு

tamil nadu

பாலியல் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு!

By

Published : Apr 22, 2022, 7:59 PM IST

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு ()

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவர்களால் நடத்தப்படும், இரண்டு விரல் பரிசோதனை செய்யும் நடைமுறையை தடைசெய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை:புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர், தையல்காரர் ராஜீவ் காந்தி. இவர் தையல் பயிற்சிக்குவந்த 16 வயது சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் பேசி, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், மாத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம், விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின்கீழ் ராஜீவ் காந்திக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜீவ் காந்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவில், கீழமை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்து, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தனர்.

இரண்டு விரல் பரிசோதனையை தடைசெய்ய வேண்டும்: மேலும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனையும் உறுதிசெய்து உத்தரவிட்டனர். உத்தரவில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளுக்கு, மருத்துவர்கள் இரண்டு விரல் சோதனை நடத்துவது தற்போது வழக்கமாக உள்ளது.

இந்தச் சோதனை குழந்தையின் கண்ணியத்தை கேலி செய்யும் விதமாக உள்ளது. போக்சோ சட்டத்தின்கீழ் பாதிக்கப்படும் சிறுமிக்கு இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை, அரசியல் சட்டத்திற்கு முரணானது. பல மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு விரல் சோதனை நடத்துவதை தடை செய்துள்ளன. உச்ச நீதிமன்றம் இந்த நடைமுறையை தடை செய்துள்ளது.

மேலும், இரண்டு விரல் சோதனை என்பது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடத்தப்படும் மிகவும் அறிவியலற்ற பரிசோதனை முறையாகும். இந்த சோதனை அரசியலமைப்பிற்கு எதிரானது. இது பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை, உடல், மன ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை மீறுகிறது.

எனவே, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவர்களால் நடத்தப்படும் இரண்டு விரல் பரிசோதனை செய்யும் நடைமுறையை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'குழந்தை திருமணம் விழிப்புணர்வு நடவடிக்கை - மகளிர் உரிமைத் துறை!'

ABOUT THE AUTHOR

...view details