தமிழ்நாடு

tamil nadu

பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது - நீதிமன்றம் கேள்வி

By

Published : Dec 2, 2020, 2:08 PM IST

பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மொழி வாரியாக எத்தனை கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் எத்தனை மைசூருவில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய,மாநில தொல்லியல் துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

மதுரை:தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகள், படிமங்களை மைசூருவிலிருந்து தமிழ்நாட்டிற்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டால், உள்கட்ட வசதிகளை அரசு செய்து தருமா? என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இளஞ்செழியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், “இந்தியாவில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், பழமையான கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துகள், மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவருகின்றன. அராபிக், பெர்சியன் கலாசார சின்னங்கள் நாக்பூரில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சமஸ்கிருதம், திராவிட பாரம்பரியச் சின்னங்கள், மைசூருவிலுள்ள மையத்திலும் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்து கண்டறியப்பட்ட தொன்மையான சின்னங்கள் கல்வெட்டுகள், தமிழ்ப் படிமங்கள் போன்றவை தற்போது மைசூருவில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பகுதியிலிருந்து திராவிட நாகரிகத்தை வெளிப்படுத்தும் இந்த அரியவகை பொருள்கள் ஏற்கனவே ஊட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டுவந்தது. தற்போது இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு மாற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.

நமது பழங்காலத் தொன்மையான நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவும் இந்த அரியவகைப் பொருள்கள் கர்நாடக மாநிலத்தில் வைக்கப்படும்போது முறையாகப் பராமரிக்கப்படாமல் அவை சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் மாற்றி பராமரிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பிரபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு கூறுகையில், “பழமையான கல்வெட்டுகளை, சாதாரண கற்களை போன்று எந்தவித வரலாற்று முக்கியத்துவம் இல்லாமல் வைத்துள்ளனர். கல்வெட்டுகளிலிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளன” என்றார்.

அப்போது மத்திய அரசுத் தரப்பில், “கல்வெட்டுகள், படிமங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. படிமங்கள் லேமினேசன் செய்யப்பட்டுள்ளன. மையம் அமைப்பதற்கு ஊட்டியில் தட்பவெப்பநிலை பாதுகாப்பாக இல்லை” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "மைசூரு மையத்தில் மொழி வாரியாக எத்தனை கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளிலிருந்து எத்தனை படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எத்தனை கல்வெட்டுகள் எந்த எந்த மொழியில் உள்ளன. மொழிவாரியாக விவரம் என்ன? எத்தனை கல்வெட்டு படிமங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன? எத்தனை படிமங்கள் சேதமடைந்துள்ளன?

சேதமடைந்த கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? மைசூருவில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகள், படிமங்களை தமிழ்நாட்டிற்கு மாற்றும்பட்சத்தில் அவற்றைப் பாதுகாப்பதற்குரிய உள்கட்ட வசதிகளைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தருமா” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இது குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details