தமிழ்நாடு

tamil nadu

திமுகவில் இணையுமாறு செந்தில்பாலாஜி மிரட்டல்: அதிமுக நிர்வாகியின் வழக்கு தள்ளுபடி

By

Published : Dec 2, 2021, 9:37 AM IST

செந்தில்பாலாஜி மிரட்டல்

திமுகவில் இணையுமாறு தன் மீது பொய் வழக்குப் போட்டு மிரட்டுவதாகவும், காவல் துறை தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரியும் கரூர் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் மதுசூதன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடிசெய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதுசூதன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்ட அதிமுகவின் கிழக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளேன். மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிமுகவைச் சேர்ந்தவர்களை திமுகவில் சேருமாறு சட்டவிரோதமாகக் கட்டாயப்படுத்திவருகிறார்.

காவல் துறையினரும் இதற்கு உடந்தையாக உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரது தூண்டுதலின்பேரில் காவல் துறையினர் திமுகவில் இணையுமாறு என்னை அணுகினர்.

இல்லையெனில் என் மீது போதைப்பொருள் கடத்தல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்வதாகவும் மிரட்டினர். என் மீது தொடர்ச்சியாகப் பொய் வழக்குப் பதிவுசெய்யலாம் என அஞ்சுகிறேன். ஆகவே காவல் துறையினர் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் குறிப்பிட்ட சம்பவத்தைக் கூறாமல் ஒட்டுமொத்தமாகக் காவல் துறைக்கு உத்தரவிடக் கோரியுள்ளார். அதுபோல உத்தரவை வழங்க இயலாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: 'தல' என்று அழைக்க வேண்டாம் - இனி அவர் 'ஏகே'

ABOUT THE AUTHOR

...view details