தமிழ்நாடு

tamil nadu

'நல்ல விலை கிடைக்கும்போது விளைச்சல் இல்லாமப் போச்சே' - மல்லிகைப்பூ விவசாயிகள் கவலை!

By

Published : May 24, 2022, 5:53 PM IST

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளதால், போதிய லாபம் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர்.

jasmine
jasmine

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளையும் மல்லிகைப் பூக்கள் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 20 டன் வரை மல்லிகைப் பூக்கள் சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பருவ நிலை மாற்றம், தொடர் மழை மற்றும் பூச்சி நோய்த்தாக்குதல் காரணமாக மல்லிகை விளைச்சல் 3 டன்னாக குறைந்துள்ளது.

மே, ஜூன் மாதங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 100 கிலோ முதல் 150 கிலோ பூக்கள் மகசூல் கிடைத்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஏக்கருக்கு 10 முதல் 20 கிலோ மட்டுமே விளைச்சல் உள்ளதாகத் தெரிகிறது. பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

கடந்த ஆண்டு கோடை சீசனில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஒரு கிலோ மல்லிகைப்பூவை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மட்டுமே விலை கொடுத்து வாங்கினர். ஆனால், இந்த ஆண்டு விளைச்சல் குறைந்துள்ளதால், ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது மல்லிகைப் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்தும், விளைச்சல் குறைவாக உள்ளதால் எதிர்பார்த்த லாபம் இல்லை என மல்லிகைப் பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விலை குறையாத தக்காளி - கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details