கோவை: ஊட்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கணேசன், கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் காசி லிங்கம், குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் ராமசந்திரன், மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். சண்முக சுந்தரம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பரபுரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் வரும் முதலமைச்சர் பழனிசாமி நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டாரா?. நான் சென்று பார்வையிட்டேன். திமுக சார்பாக 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இப்போது ஒரு வார காலமாக கருத்துகணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. எல்லா கருத்துகணிப்புகளிலும் திமுக அணி தான் வெற்றி பெற போகிறது என வந்துள்ளது. தொலைக்காட்சிகளில் திமுக வெற்றி பெறும் என வந்ததும் அந்த தொலைக்காட்சிகளை ஆளும் கட்சியினர் மிரட்டியுள்ளனர். அரசு கேபிளில் சேனலை கட் செய்துள்ளனர்.
முதல் முதலாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது 200 தொகுதிகளில் வெற்றி என எண்ணியிருந்தேன். இப்போது பார்க்கையில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை வந்துள்ளது. மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த அரசாங்கம் கொள்ளை அடித்த அரசாங்கம், ஊழல் செய்த அரசாங்கம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தாக்குதல் நடத்திய அரசாங்கம், அரசு ஊழியர்கள் உள்பட எல்லாவற்றையும் போராட வைத்த அரசாங்கம். பொல்லாத அரசாங்கம் என்பதற்கு பொள்ளாச்சியே சாட்சி.
சிஏஏ, நீட் தேர்வு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
மதுரை வரும் பிரதமரிடம் சிஏஏ, நீட் தேர்வு, வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்ப பெற முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Stalin's campaign in Coimbatore
பிரதமர் மோடி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தை அவர் நினைத்து பார்க்க வேண்டும். 400 பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்டுள்ளனர். இது அதிமுக ஆட்சியில் நடந்தது. இதை பிரதமர் மோடி தெரிந்து கொள்ள வேண்டும்.
பழனிசாமி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு போட்டுள்ளது. மோடியை பார்த்து குனிந்தாவது கேட்கனும் இதை வாபஸ் பெறுங்கள் என்று. நீலகிரி மாவட்டத்தில் இருந்த உருளைகிழங்கு ஆராய்ச்சி மையம் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அது மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்படும். குன்னூரில் அரசு கலை கல்லூரி, பச்சை தேயிலைக்கு ஆதாரவிலை, கட்டுமான வளர்ச்சிக்கு மாஸ்டர் பிளான், அரசு மருத்துவமனை நவீனப்படுத்துதல், சுற்றுலாவை மேம்படுத்துதல், மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும்" என்று தெரிவித்தார்.
TAGGED:
கோவையில் ஸ்டாலின் பரப்புரை