தமிழ்நாடு

tamil nadu

'திராவிட மாடல்' என்று சொல்வதற்கு பெருமையாக உள்ளது - சத்யராஜ்

By

Published : Apr 17, 2022, 8:13 PM IST

'திராவிட மாடல்' என்ற சொல்லை சொல்வதற்கே பெருமையாக உள்ளது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?
இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் எழுத்தாளர் ப. திருமாவேலன் எழுதிய 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' என்னும் புத்தக அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ், சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் செந்தலை கௌதமன் , எழுத்தாளர் பாமரன், தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

அப்போது சத்யராஜ் கூறுகையில் "எனக்கு புரட்சித் தமிழன் என்ற பட்டம் பொருந்தாது. இனமுரசு என்ற பட்டம் எனக்கு ஏற்புடையது. இந்த நூல் பெரியார் குறித்து பல்வேறு உதாரணங்களுடன் எழுதப்பட்டுள்ளது. தமிழ் சமூகத்திற்கு பயன்படும் வகையில், இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ்

இது அனைவருடைய கையிலும் இருக்க வேண்டியது. தமிழ்நாடு முதலமைச்சர் 21 இந்திய மொழிகளில் பெரியாரின் புத்தகங்களை மொழி பெயர்த்திட செய்துள்ளார். அத்துடன் உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அப்படி செய்தால், ஆங்கிலேயர்களும் பெரியாரைப் பற்றி எழுதுவர்.

பெரியார் தத்துவங்கள் மனித மேன்மைக்கானது. அவருடைய சிந்தனைகள் உலக பயன்பாட்டிற்கானது. பெரியாருக்கும், கடவுளுக்கும் பிரச்சினை கிடையாது. சினிமாவில் பெரியாராக நடிப்பதே கடினமாக இருந்தது. அப்போது, பெரியார் போல் வாழ்வது எவ்வளவு கடினமாக இருக்கும். தற்போது 'திராவிட மாடல்' என்ற சொல்லை சொல்வதற்கு மிகவும் பெருமையாக உள்ளது. இளைஞர்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து வெளிவர பெரியாரைப் படிக்க வேண்டும்" என்றார்.

விழாவில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா

இதையடுத்து பேசிய ஆ.ராசா, "தத்துவங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு நூற்றாண்டுகள் ஆகும். ஆனால், வாழ்ந்த காலத்திலேயே தத்துவத்தை ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததை பார்த்த ஒரே தலைவர் பெரியார். இதனை அண்ணா சொல்லிருக்கிறார்.

பெரியார் ஒரு தத்துவம். அவரை சிலர் மொழியில் அடக்க பார்க்கிறார்கள். எனக்கு மொழிப்பற்று, தேசப்பற்று கிடையாது. மனித பற்றுதான் உள்ளது எனக் கூறியவர் பெரியார். பெரிய சாதி எனும் கட்டுமானத்தை உடைத்து எளிமையாக தாழ்ந்த சாதி மக்களுடன் வாழ்ந்தவர் பெரியார்.

அம்பேத்கரை வளைத்துப்போட வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் பார்க்கிறார்கள். பெரியார் என்ற நெருப்பை அவர்களால் பொட்டலம் கூட கட்ட முடியவில்லை. தற்போது உள்ள கடவுள்கள் அனைத்தும் இந்து மதத்தின் கடவுள்கள் அல்ல" என்றார். இறுதியாக புத்தகங்கள் விநியோகிப்பட்டன.

இதையும் படிங்க:'ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு; மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்'

ABOUT THE AUTHOR

...view details