தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு கொலை வழக்கு: விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியதாகத் தகவல்

By

Published : Aug 17, 2021, 10:30 PM IST

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நிபந்தனை பிணையில் உள்ள சயானிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், அந்த சம்பவத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக சயான் விசாரணை அலுவலர்களிடம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோடநாடு கொலை வழக்கு
கோடநாடு கொலை வழக்கு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்குச் சொந்தமான எஸ்டேட் உள்ளது.

இங்குள்ள சொகுசு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலில் இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோவையைச் சார்ந்த பேக்கரி உரிமையாளர் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறி, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீசன், ஜம்சீர் அலி, உதயகுமார் உள்ளிட்ட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோடநாடு கொலை வழக்கு: விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியதாகத் தகவல்

சயானுக்கு கிடைத்த நிபந்தனை பிணை

இந்த வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில், கடந்த மாதம் சயானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது.

தற்போது நிபந்தனை பிணையில் உதகையில் சயான் தங்கி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் கடந்த 13 வழக்குகளின் விசாரணையின்போது கோத்தகிரி காவல் துறையினர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக, மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபாவிடம் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி போலீஸார் நேற்று மாலை(ஆகஸ்ட் 16) சம்மன் வழங்கினர்.

அதனைப் பெற்றுக்கொண்ட சயான் இன்று மாலை 3.20 மணிக்கு உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

கொள்ளை சம்பவத்துக்கு தூண்டுதலாக இருந்தாரா எடப்பாடி பழனிசாமி?

விசாரணையில் கோடநாடு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரும், எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான கனகராஜ் தன்னிடம் கூறிய படி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூடலூர் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரியும் அதிமுகவில் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளருமான சஜீவன் தூண்டுதலின் பேரில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதாக சாயன் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அதிமுக ஆட்சியில் இருந்ததால் உயிருக்கு பயந்து அப்போதையை விசாரணையின்போது தன்னால் கூற முடியவில்லை என்றும் கூறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே மீண்டும் விசாரணைக்கு அழைத்ததால் விசாரணைக்கு வர வேண்டும் என காவல் துறையினர் சயானிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு - முதல் குற்றவாளி சயானிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details