தமிழ்நாடு

tamil nadu

பிழைப்பின்றித் தவிக்கும் வீதிக் கலைஞர்கள் - விடியல் தருமா அரசு?

By

Published : Sep 1, 2021, 3:13 PM IST

வீதிக் கலைஞர்கள்
வீதிக் கலைஞர்கள் ()

ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று நடனமாடி பிழைப்பு நடத்தும் வீதிக் கலைஞர்கள் வருமானமின்றித் தவித்து வரும் நிலையில், அவர்களது வாழ்வில் விடியலை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெல்லிசைக் கலைஞர்களைப் போன்று, ஆடல் கலைஞர்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் இருந்து வருகின்றனர்.

கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து, நாடகம், மெல்லிசை நிகழ்ச்சி போன்றவவை நடக்கும். அதேபோல, ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு சினிமா பிரபலங்களைப் போல வேடமணிந்து, அவர்களின் உடல் மொழியோடு நடனமாடி பார்வையாளர்களை மகிழ்விப்பர். பொதுவாக ஒரு குழுவில், ஆண், பெண் என்று குறைந்தது 20 பேர் இருப்பர். மேடையில் ஆடும் நடனக் கலைஞர்கள் மட்டுமின்றி, வீதியில் ஆடும் நடனக் கலைஞர்களும் உள்ளனர்.

நாடோடி வீதிக் கலைஞர்கள்

இவர்கள் பெரும்பாலும், ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருப்பர். மொத்தமாகவே நான்கு அல்லது ஐந்து பேர், குழந்தைகளுடன் ஒரு சிறிய வாகனத்தில் ஊர் ஊராகப் பயணிப்பர். ஒவ்வொரு ஊரிலும், அங்குள்ள முக்கிய வீதியில் பாடலை ஒலிக்கவிட்டு, அதற்கு ஏற்ப அவர்கள் நடனமாடுவர்.

தங்களுக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேகமான வாகனத்தில் குடும்பத்துடன் ஊர் ஊராக அலைந்து திரிந்து, வீதிவீதியாக நடனமாடும் இவர்களுக்கு, அவ்வூரிலுள்ள மக்கள் கொடுக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் மட்டுமே வருமானம்.

இதனைப் பெற்றுக்கொண்டு தங்களது குடும்பத்தைக் கவனித்து வருவதோடு, அடுத்த ஊர்களுக்கும் நகர்ந்து செல்வர்.

தொடரும் பயணங்கள்

பொதுவாகவே குறைந்தளவு வருமானம் கொண்ட இவர்களுக்கு, கரோனா தொற்று பேரிடியாக இறங்கியது. இவர்களுக்கென்று எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பும் இல்லாததால், தங்கள் பிரச்னைகளை எடுத்துக் கூற ஆளில்லாமல் தவித்து வருகின்றனர்.

ஒரு ஊரில் கிடைக்கும் பணத்தை வைத்து உணவு உண்டு, குழந்தைகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கி, குடும்பம் நடத்த பெரும் சிரமப்பட்டு வரும் இவர்களுக்கு மற்றொரு இடியாக வந்தது, பெட்ரோல் விலை உயர்வு.

உணவுக்குப் போக மீதமுள்ள பணத்தை வைத்து வாகனத்திற்குப் பெட்ரோல் போட்டு, மனம் தளராமல் இன்னொரு ஊரை நோக்கிப் பயணிக்கின்றனர்.

வீதிக் கலைஞர்கள்

வாழ்க்கை மலருமா?

இன்றைய காலகட்டத்தில் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் தான், வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் எனக் கூறி வருபவர்கள் மத்தியில் ஒரு நாளைக்கு 100 ரூபாயை வைத்துக்கொண்டு, குடும்பத்தை நடத்திப் பிழைக்கும், இவர்களது வாழ்க்கை கேள்விக் குறியாகவே இருக்கிறது.

ஊரடங்குத் தற்போது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருவதால், இனியேனும் தங்களுக்கு வாழ்க்கை மலருமா என்ற ஏக்கத்துடன் இருக்கின்றனர்.

இவர்களது நிலைமையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து வீதிக் கலைஞர்களின் வாழ்க்கையிலும் விடியலைத் தர வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.

இதையும் படிங்க: நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் - ஆதவன் தீட்சண்யா

ABOUT THE AUTHOR

...view details