தமிழ்நாடு

tamil nadu

ஓபிஎஸ் வழக்கு இடைக்காலத் தடை நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Feb 1, 2022, 7:46 PM IST

வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி., மீதான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ஓபிஎஸ் வழக்கு இடைக்காலத் தடை நீட்டிப்பு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர்,

தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி சென்னை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி., மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிப்ரவரி 7ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஓ.ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இன்று(பிப்.1) வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று(பிப்.1) வந்தபோது, காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

அதேபோல புகார்தாரரான மிலானி தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன், இதுசம்பந்தமான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகல்களை இணைத்துப் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்று விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, இந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்கும் வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Budget 2022: பாதுகாப்புத்துறையில் தற்சார்பு, தனியார் முதலீட்டுக்கு முக்கியத்துவம்

ABOUT THE AUTHOR

...view details