தமிழ்நாடு

tamil nadu

ஓய்வூதியம் வழங்கக்கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 15, 2020, 11:07 PM IST

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

சென்னை: 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

59 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், ஏப்ரல் 2019 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள வருங்கால வைப்பு நிதி, பனிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை, விடுப்பு சம்பள தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கரோனா பாதிப்பு காரணமாக தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் கர்சன் பேசுகையில், ”கடந்தாண்டு ஏப்ரல் முதல் மார்ச் 2020ஆம் ஆண்டுவரை 6,222 பேர் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு போக்குவரத்து துறை 1654 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.

ஏப்ரல் மாதம் 650 பேர் ஓய்வு பெற்றனர். 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஓய்வூதிய அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. போக்குவரத்துக் கழகத்திடம் நிதியில்லை என்று கூறுகிறார்கள்.

மின்சார வாரியத்திடம் பணமில்லாத போது தமிழ்நாடு அரசு வழங்குவதைப் போல போக்குவரத்துக் கழகத்துக்கும் அரசு நிதி வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகம் மக்கள் சேவைக்காக நடத்தப்படுவதால் இதில் லாபம் பார்க்கக்கூடாது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details