தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியர் தேர்வு முறைகேடு! - விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைப்பு!

By

Published : Dec 17, 2020, 7:24 PM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

case
case

பள்ளிக்கல்வித்துறையில் கடந்து 2019 ஆம் ஆண்டு 814 கணிப்பொறி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 26 ஆயிரத்து 882 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு 2019 ஜூன் மாதம் ஆன் லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 3 மையங்களில் இணையதள சேவை கிடைக்காமல் தேர்வு தடைபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் செல்ஃபோன் எடுத்து வர அனுமதி அளித்ததாகவும், 3 மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி, தேர்வு பட்டியலை ரத்து செய்து மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வானவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதேசமயம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில், ஒருநபர் ஆணையத்தை அமைத்து நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டார்.

மேலும், விசாரணை அறிக்கையை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய, ஆதிநாதன் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார். அதோடு நீதிபதி ஆதிநாதனுக்கு ஊதியமாக 3 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கவும், அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும்...

ABOUT THE AUTHOR

...view details