தமிழ்நாடு

tamil nadu

குழந்தை விற்ற விவகாரம்: தாயே பணத்தை ஒளித்துவைத்து நாடகமாடியது அம்பலம்

By

Published : Nov 30, 2021, 10:12 AM IST

பிறந்து ஐந்து நாள்களே ஆன குழந்தையை விற்ற விவகாரத்தில் தாய், இடைத்தரகர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குழந்தையைப் பெற்ற பெண் இடைத்தரகரிடம் வாங்கிய பணத்தை மறைத்ததோடு அப்பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவாங்கரை
காவாங்கரை

சென்னை:புழல் காவாங்கரை சேர்ந்தவர் யாஸ்மின் (28) கடந்த 27ஆம் தேதி மதியம் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே ஆட்டோவில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வழிமறித்து இவரது பணப்பையைப் பறித்துச் சென்றதாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் யாஸ்மினிடம் நடத்திய விசாரணையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு யாஷ்மினுக்கும் திருமணம் நடந்து 10 வயதில் ஒரு மகள் உள்ளார். யாஸ்மின் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவர் மோகன் பிரிந்து சென்றுவிட்டார்.

மன வேதனையும்... குழந்தை விற்பனையும்...

பின்னர் பணப்பற்றாக்குறை காரணமாகக் கருக்கலைப்பு செய்ய எண்ணினார். யாஸ்மின் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் செல்லும்போது எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது யாஸ்மின் கருக்கலைப்பு குறித்து ஜெயகீதாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

அதற்கு ஜெயகீதா குழந்தையைப் பெற்று குழந்தை இல்லாதவர்களுக்குக் கொடுத்தால் அதிகப் பணம் கிடைக்கும் என்று கூறியதால் யாஸ்மினும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஸ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அதன்பின் கடந்த 25ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன யாஸ்மின் ஜெயகீதா கூறியதன்பேரில் குழந்தையுடன் புரசைவாக்கத்திற்கு வந்தார். அங்குக் காத்திருந்த ஜெயகீதா, தனது நண்பர் தனம் அழைத்து வந்த தம்பதியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு 3.5 லட்ச ரூபாயை யாஸ்மினிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். பணத்தை வாங்கிக்கொண்டு யாஸ்மின் புரசைவாக்கத்திலிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.

நண்பர்களுடன் குழந்தை விற்பனை

பின்னர் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே ஆட்டோவில் சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் ஆட்டோ ஓட்டுநரிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக யாஸ்மின் தெரிவித்திருந்தார். இதனையடுத்து காவல் துறையினர் ஜெயகீதாவிடம் நடத்திய விசாரணையில் தனது நண்பர்களான தனம், லதா, ஆரோக்கியமேரி, ஆகியோருடன் சேர்ந்து குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தையை வாங்கி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

மேலும் ஏற்கனவே யாஸ்மின் கருமுட்டைகளைப் பணத்திற்காக விற்றதாகத் தெரிவித்த ஜெயகீதா, இடைத்தரகர் ஆரோக்கியமேரி தான் வேலை பார்த்துவந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவந்த சிவக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பல ஆண்டுகளாக அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் யாஸ்மினின் குழந்தையை அவர்களுக்கு 3.5 லட்ச ரூபாய் பேரம் பேசி விற்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து குழந்தையை 3.5 லட்ச ரூபாய்க்கு விற்று அதில் 1.70 லட்ச ரூபாயை யாஸ்மினுக்கு வழங்கிவிட்டு மீதமுள்ள தரகுத் தொகையாக ஜெயகீதா, ஆரோக்கியமேரி, தனம் மூன்று பேரும் பிரித்து எடுத்துக்கொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து யாஸ்மின் பணத்தை யாரோ திருடிச் சென்றதாகக் கூறி, குழந்தையை மறுபடியும் வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறி தன்னிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கியதாக ஜெயகீதா தெரிவித்தார்.

சிசிடிவியில் வெளிவந்த நாடகம்

இதனையடுத்து காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பணப்பறிப்பு சம்பவம் எதுவும் நடைபெறாததால் யாஸ்மினிடம் மீண்டும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் யாஸ்மின் பணத்தைப் பதுக்கி வைத்துக்கொண்டு நாடகமாடியது தெரியவந்தது.

மேலும் ஆட்டோவில் வந்த யாஸ்மினின் திருமண பந்தத்தைத் தாண்டிய காதலன் ஜெகனிடம் 1.70 லட்சம் ரூபாயைக் கொடுத்து அனுப்பிவிட்டு ஜெயகீதாவிடம் நாடகமாடி 50 ஆயிரம் ரூபாய் பெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து மூலக்கொத்தளத்தில் சிவக்குமாரின் வீட்டிலிருந்த குழந்தையை மீட்ட காவல் துறையினர் யாஸ்மின் வீட்டிலிருந்து 2.20 லட்சம் ரூபாயைப் பறிமுதல்செய்தனர். மேலும் குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாகக் குழந்தையைச் சட்டவிரோதமாகத் தத்து கொடுப்பது - சட்டவிரோதமாகக் குழந்தை விற்பனை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பின் யாஸ்மின், இடைத்தரகர் ஜெயகீதா, தனம், குழந்தையை வாங்கிய சிவக்குமார் ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக இருந்துவரும் லதா, ஆரோக்கியமேரியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:தொடர் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details