தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் 551 திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு அனுமதி

By

Published : Dec 24, 2021, 11:55 AM IST

Updated : Dec 24, 2021, 12:13 PM IST

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களின் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளதாக துறையின் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 551 திருக்கோயில்களுக்கு திருப்பணிகளுக்கு அனுமதி
தமிழ்நாட்டில் 551 திருக்கோயில்களுக்கு திருப்பணிகளுக்கு அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் 551 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதுடன், அவற்றைப் பக்தர்கள் பார்வையிடும் வகையில் திருக்கோயில்களின் பெயர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன என பி.கே. சேகர்பாபு தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளப் பக்கத்தின் முகப்புத் தோற்றம்

திருப்பணிகள்

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாகத் தொடங்கப்பட்ட நன்கொடையாளர்கள் இணையதளம் மூலம் நன்கொடை வழங்கும் திட்டம், வாடகைதாரர்கள் கணினி வழியாக வாடகை செலுத்தும் திட்டம், ஆணையரின் சுற்றறிக்கை, நிர்வாக வரவு-செலவுத் திட்டம், திருக்கோயில்களின் திருப்பணி உள்பட பக்தர்கள் எளிதில் துறை சார்ந்த நிகழ்வுகளை நேரிடையாகப் பார்த்துப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் துறையின் அனைத்துச் செயல்பாடுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுவருகின்றன.

ஆகம விதிகளின்படி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். பழமைவாய்ந்த திருக்கோயில்களில் அவற்றின் பழமை மாறாது புனரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் ஆலோசனைகள் பெற்று, மண்டல அளவிலான வல்லுநர் குழு - மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.

ஆகம விதிகளின்படி அனுமதி

இதனைத் தொடர்ந்து, திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ள இரண்டு வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட திருக்கோயில்களான,

  1. சென்னை அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்
  2. புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில்
  3. திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
  4. மதுரை மாவட்டம் அருள்மிகு கூடழலகர் திருக்கோயில்
  5. காஞ்சிபுரம் குன்னவாக்கம் அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில்
  6. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
  7. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
  8. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்
  9. சேலம் மாவட்டம் மேட்டூர் அருள்மிகு சென்றாயப் பெருமாள் திருக்கோயில்
  10. கோவை மாவட்டம் கோட்டை அருள்மிகு கங்கமேஸ்வரர் திருக்கோயில்
  11. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருள்மிகு வீர நரசிம்மப்பெருமாள் திருக்கோயில்
  12. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருள்மிகு ரத்தின கீரீஸ்வரசுவாமி திருக்கோயில்
  13. தஞ்சாவூர் மாவட்டம் கோபுராபுரம் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
  14. திருச்சி மாவட்டம் லால்குடி அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்

உள்பட 551 திருக்கோயில்களுக்கு ஆகம விதிப்படி திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தலங்களில் திருப்பணிகள் முடிவுற்றவுடன் திருக்குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் கண்டறியும் வசதி

மேலும் பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களைwww.hrce.tn.gov.inஎன்ற இணையதளத்தில் ‘திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்’ என்ற பகுதிக்குச் சென்று மாவட்டம் வாரியாக திருக்கோயில்களைத் தேர்வுசெய்து தெரிந்துகொள்ளலாம்.

இதனால் தங்கள் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனத் தெரிந்துகொண்டு திருப்பணிக்கான வேலைகள் முடிவுற்றபின் குடமுழுக்கு நடத்துவதற்குப் பக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: SNOWFALL OVER HILLS: கொடைக்கானலில் தொடங்கியது உறை பனி சீசன்

Last Updated : Dec 24, 2021, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details