தமிழ்நாடு

tamil nadu

’புதிய பேருந்துகளை இயக்க ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை’ - அமைச்சர் ராஜகண்ணப்பன்

By

Published : Aug 12, 2021, 12:55 PM IST

சென்னை: நிதித் சுமையில் தமிழ்நாடு இருந்தாலும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்றும், தேவையற்ற செலவுகளைக் குறைத்து வருகிறோம் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் புதிய வழித்தடங்கள், நிறுத்தப்பட்ட வழித்தடங்களில், 23 மாநகரப் பேருந்துகள் இயக்கத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (ஆக.12) கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

பிறகு புதிய வழித்தடத்தில் அமைச்சர்கள் இருவரும் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "உப்பு தின்றவர் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். தவறு செய்தால் தண்டனை நிச்சயம்.

இதற்கு மற்றவர்களை குறைந்து பேசக்கூடாது. பொதுமக்களின் நன்மையைக் கருதி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்.

மேலும் அதிமுகவினர் கடந்த ஆட்சிக் காலத்தில், மோசமான நிர்வாகத்தை நடத்திவிட்டு நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினர்தானே தவிர தலைவர் இல்லை" என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தத்தபோது கூறுகையில், "தமிழ்நாட்டில் போக்குவரத்துத்துறை நட்டத்தில் சென்றாலும், மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை புதுப்பொலிவு பெறும்.

பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக ஜெர்மனி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி விரைவில் 2,500 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

போக்குவரத்து துறை நிதிச்சுமையில் இருந்தபோதும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை. தேவையற்ற செலவுகளை குறைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் 40 விழுக்காடு பெண்கள் பயன்பெறுவர் என்ற எதிர்பார்ப்பில் இலவசப் பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது 61 விழுக்காடு பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

இதனால் கூடுதலாக 150 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டியுள்ளது. பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீரை தொடர்ந்து கொண்டுவர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னை போன்ற நகரங்களில் 60 விழுக்காடு மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. ஆடைகள், காலணி போன்று முகக்கவசம் அணிவது வழக்கமாக மாறியுள்ளது. இதனால் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பட்ஜெட் 2021: புதுமையை புகுத்தியிருப்பாரா பிடிஆர்... ஓர் அலசல்!

ABOUT THE AUTHOR

...view details