தமிழ்நாடு

tamil nadu

மதம் மாறியவருக்கு கலப்புத் திருமண சான்றிதழ் வழங்க முடியாது - உயர் நீதிமன்றம்

By

Published : Nov 25, 2021, 3:06 PM IST

மதம் மாறியவருக்கு கலப்புத் திருமணச் சான்றிதழ் வழங்கினால் பலன்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

MHC
MHC

சென்னை:சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த இவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனச் சாதிச்சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம்புரிந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு மணச் சான்று வழங்க முடியாது எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பால்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது 1997ஆம் ஆண்டு அரசாணைப்படி மதம் மாறிய நபர்களுக்கு கலப்பு மணச் சான்றிதழ் வழங்க முடியாது என்பதால், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்தது சரியே என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மதம் மாறியவருக்கு கலப்பு மணச் சான்று வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரே சாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன் - மனைவிக்கு கலப்பு மணச் சான்று பெறத் தகுதியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதம் மாறியவருக்கு கலப்பு மணச் சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாகப் பயன்படுத்தக் கூடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டின்கீழ் பணி நியமனம்: மதம் மாறிய ஊழியர்களைக் கண்டறிந்தால் உடனடி பணிநீக்கம்

ABOUT THE AUTHOR

...view details