தமிழ்நாடு

tamil nadu

அடுத்தவர் சாதனைக்கு, ஸ்டிக்கர் ஒட்டும் திமுக - அண்ணாமலை ஓபன் அட்டாக்

By

Published : Sep 15, 2022, 10:53 PM IST

அண்ணாமலை ஓபன் அட்டாக்

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு தங்களுடையை தொடர் முயற்சியே காரணம் என திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்த நிலையில், அடுத்தவர் சாதனைக்கு அட்ரஸ் ஒட்டுவதே திமுகவின் வேலை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்தது.

இதேபோன்று கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால் பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று விருதுநகரில் முதலமைச்சர் ஸ்டாலினை நரிக்குறவர் சமூகத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட பதிவில் '‘பழங்குடியினர்’ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக திமுகவும் திமுக அரசும் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக பலன் கிடைத்துள்ளது.

சமத்துவப் பெரியார் கலைஞரின் வழியில் நடக்கும் நமது அரசு, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மைச் சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் எப்போதும் துணை நிற்பேன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ்நாட்டில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள், மிகுந்த நலிந்த நிலையில் இருந்தபோதிலும், பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தமையால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறிப் போய்க் கொண்டிருந்தன.

இந்த நிலை மாற, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்கள், மத்தியில் காங்கிரஸ் திமுக ஆட்சிக்காலத்தில் இருந்து, தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தனர். பல காலமாக இவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக, கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தைச்சேர்ந்த பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை எல்லாம் எடுத்துக்கூறினர். தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக போராடியும் திமுக காங்கிரஸ் அரசுகள், அவர்களை உதாசீனப்படுத்தியதை மிகுந்த வலியுடன் எடுத்துக்கூறினர்.

எங்களை சந்தித்து உங்கள் குறைகளை எடுத்து உரைத்துள்ளீர்கள். பாரதப் பிரதமரின் கவனத்திற்கு இதையெல்லாம் கொண்டுசென்று, அனைவருக்கும் விரைவில், நல்ல பதில் சொல்வேன் என்ற உறுதியை நான் அளித்திருந்தேன்.

அதேபோல புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டக்கூட்டத்தில், அங்கே திரளாக வந்திருந்த நரிக்குறவர்களின் பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில், அவர்களின் கோரிக்கையினை விரைவில் மத்திய அரசால் நிறைவேற்றி வைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தேன்.

பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட கவனத்திற்கும், மத்திய அரசின் எஸ்.டி. பிரிவினரின் பதிவாளர் கவனத்திற்கும், இம் மனுக்களைக்கொண்டு சென்று, நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை பழங்குடியினர் எஸ்.டி. பட்டியலில் சேர்க்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் தமிழ்நாடு பாஜகவால் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகைசெய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டியின் பரிந்துரை நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே. 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இதை செய்யத் தவறியது ஏன்? அதற்குப் பின்பு காங்கிரஸ் கட்சியுடன் பல ஆண்டுகள் மற்றும் ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருந்த திமுகவுக்கு இதைப்பற்றி சிந்திக்க மனம் வரவில்லையா? 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது நரிக்குறவ மக்களை பழங்குடியினர் பட்டியிலில் சேர்ப்பதற்கு திமுக ஏன் முயற்சி எடுக்கவில்லை?

2011-12ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சமூகநீதி மற்றும் அதிகாரத்திற்கான நிலைக்குழுவின்படி 24.11.2009ஆம் ஆண்டு நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக விளக்கங்கள் கேட்டு, இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்குப்போதிய விளக்கம் வழங்காமல் அன்றைய திமுக அரசு என்ன செய்துகொண்டிருந்தது. அப்போது மத்தியில் அதிகார உச்சியில் இருந்த திமுக நரிக்குறவ மக்களை பற்றி கவலைப்பட்டதுண்டா? குறைந்த விழுக்காடு வாக்குகள் உள்ள சமுதாயத்தால் என்ன பயன் என்று உதாசீனப்படுத்தியது தான் திமுக செய்த ஒரே சாதனை.

1965ஆம் ஆண்டுமுதல் தங்கள் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த, நரிக்குறவர் சமுதாய மக்கள், தங்களின் நாற்பதாண்டு காலக்கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய அரசுக்கும், தங்களின் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசின் ஆட்சியும் அதிகாரமும் தங்கள் கையில் இருந்தபோதும், மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போதும், நரிக்குறவர் இன மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்ட திமுக, பாரதப் பிரதமர் அவர்களின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம் போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும், வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

முதலமைச்சரின் ஒற்றைக்கடிதத்தில் மத்திய அரசு இப்படி வேலை செய்யும் என்றால் அவர்கள் ஆட்சிக்காலத்திலேயே இன்னும் எளிதாக குருவிக்காரர்கள் கோரிக்கையை தங்கள் அமைச்சர்களை வைத்தே, நிறைவேற்றித் தந்திருக்கலாமே?

கீரியையும், பாம்பையும், சண்டை விடப்போகிறேன் என்று வித்தை காட்டி ஏமாற்றும் வித்தைக்காரனைப் போல, விடியல் விடியல் வருகிறது வருகிறது என்று கூவிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, உருப்படியாக எதுவும் மக்களுக்குச் செய்யவில்லை.

ஒருவேளை இந்த ஆட்சி முடிந்த பிறகுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையான விடியல் வரும் போலும்' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: பழங்குடியின தகுதி...நரிக்குறவர் சமுதாய இளைஞர்களின் கல்வி,வேலைவாய்ப்பில் சமூகநீதியை பெற்றுத் தரும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details