சென்னை தலைமைச்செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "சுதந்திர தினத்தில் சென்னை தலைமைச்செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும்.
ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்னைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறக்கூடும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 17இன் படி தீண்டாமையில் ஈடுபடுவது தண்டைக்குரிய குற்றம். எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச்சட்டப்படி, பட்டியலின மற்றும் பழங்குடியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்கள் என எவரையும் பணி செய்யவிடாமல் தடுப்பதோ, அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றம்.
இவற்றைக்கருத்தில் கொண்டு எதிர்வரும் 75ஆவது சுதந்திர தின விழாவில், எவ்வித சாதியப் பாகுபாடின்றியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக்கொண்டு, அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.