சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தின் தொடக்க விழா இன்று (செப். 5) நடைபெற்றது.
சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அவரது முன்னிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தார். மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை 'சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை' என மாற்றம் செய்துள்ளது. பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர் கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், உருவாக அடித்தளமாக 'புதுமைப் பெண்' என்னும் உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
புதுமைப் பெண்திட்டத்தின் பயன்கள்:பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.
திட்டத்தின் பயனாளிகள்: இத்திட்டத்தின் கீழ், பயன்பெறும் மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர் கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின்கீழ் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்று, 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும். மாணவிகள் 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.