சென்னை: ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் (ஜனவரி 5)அந்தமானுக்குச் செல்லும் அனைத்து உள்நாட்டுப் பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் கட்டாயம் என்று விமான போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை அமைச்சகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கரோனா, ஒமைக்ரான் பரிசோதனை கட்டாயம். அத்தோடு மற்ற நகரங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமான பயணிகள் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டு 15 நாள்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரசின் பாதிப்பு, வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்றின் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து கரோனா, ஒமைக்ரான் அதிகளவில் பரவிவரும், கேரள மாநிலம் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கும், அகமதாபாத், கோவா, சீரடி ஆகிய பெருநகரங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமான பயணிகள் அனைவரும் பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக் கூடத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ்களுடன்தான் பயணம் செய்ய வேண்டும். நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை.
விமான பயணத்திற்கு ஆர்டி-பிசிஆர் கட்டாயம்
சென்னையிலிருந்து மற்ற நகரங்களுக்குப் பயணிக்கும் உள்நாட்டுப் பயணிகள், கரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டு தவணைகள் போட்டிருக்க வேண்டும். மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு 15 நாள்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்கள் இருந்தால்தான் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.