தமிழ்நாடு

tamil nadu

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை - வானிலை ஆய்வு மையம்

By

Published : Nov 25, 2021, 3:01 PM IST

v
v ()

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், "தெற்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அதே இடத்தில் நீடிக்கின்றது. இது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை.

மழைக்கான அறிவிப்பு

இதன் காரணமாக இன்று (நவம்பர் 25) ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் - கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் - ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுசேரி, தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் - உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

நவம்பர் 26: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன முதல் மிக கன மழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னைக்கான அறிவிப்பு

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 8, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை - வங்க கடல் பகுதிகள்

அடுத்த இரண்டு நாள்களுக்கு குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நவம்பர் 27:குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நவம்பர் 28: தெற்கு அந்தமான் கடற் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென் மாவட்டங்களில் கனமழை தொடரும். நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - டெல்டா மாவட்டங்களில் கனமழை

ABOUT THE AUTHOR

...view details