தமிழ்நாடு

tamil nadu

"சென்னை கமிஷனரின் பணியை செய்யவிடாமல் அரசியல் தலையீடு இருப்பதால், மாட்டிக்கொண்டு முழிக்கிறார்" - ஜெயக்குமார்

By

Published : Jun 6, 2022, 3:15 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ’தமிழ்நாட்டில் கட்டிங், கரப்சன், கட்டப்பஞ்சாயத்து நடந்து வருகிறது. அண்ணாமலை தவறாகப்பேசி இருந்தால் வழக்குப்போடலாமே, வழக்குப்போட தைரியமில்லாதவர்கள் திமுகவினர்’ என்றார்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

சென்னை:நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "ஜனநாயக கடமையை ஆற்றிய என் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளது திமுக. நீதிமன்ற உத்தரவை மதித்து தொடர்ந்து கையெழுத்திட்டு வருகிறேன். ஊடகங்களையும், கட்சியின் தொண்டர்களையும் சந்திக்க ஒரு வாய்ப்பை வாரம் ஒரு முறை ஏற்படுத்தியுள்ளது, இந்த அரசு. அந்தமானில் கையெழுத்து போடச் சொன்னாலும், நான் ரெடியாக இருக்கிறேன். அதனைப் பற்றி வருத்தப்படுவதில்லை.

அறநிலையத்துறை-பில்டப் மட்டுமே:இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும்; ஆன்மிகத்தை திருடிக் கொண்டு 'திராவிடம்' என சொல்கிறார்கள். 'திருக்கோவில் சொத்துகள் தொலைந்து போகின்றன' என்ற மதுரை ஆதீனம் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. இந்து சமய அறநிலையத்துறை புனிதமானது. இந்து சமய அறநிலையத்துறையில் ஆக்கப்பூர்வமான செயல் எதுவும் செய்யவில்லை; பில்டப் மட்டுமே இருக்கிறது. மதுரை ஆதீனத்தின் கருத்தை உதாசீனப்படுத்திவிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அனைவரும் மனம் குளிரும்படி செய்வோம் என்று சொல்வார் பாருங்கள்.

பராசக்தி வசனம் உண்மையானது:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 'பராசக்தி' பட வசனத்தைப்போல "கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது" என்று இருக்கும். அது போல தற்போது மாறி விட்டது. கருணாநிதியின் வசனத்தை உண்மையாக்கும் முயற்சியில் தற்போதைய அரசு அதனை செய்துகொண்டிருக்கிறது.

வடிவேலு காமெடிபோல 'திரும்ப திரும்ப பேசுற..நீ': நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் வருவதுபோல "திரும்ப திரும்ப பேசுற.. நீ" என சசிகலா அதிமுக தன்னுடையது என்கிறார். அனைத்து நீதிமன்றங்களும் அதிமுக, யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக தெளிவாக தீர்ப்புக்கூறியுள்ளன. நாங்கள் தான் அதிமுக என்று கூறியுள்ளன.

நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலில் சசிகலா ஈடுபடுகிறார். அவரின் கருத்தை, யாரும் பொருட்படுத்துவதில்லை. அமமுகவினர் அனைவரும் அதிமுகவிற்கு வந்துவிட்டனர்; அக்கட்சியில் 4 பேர் மட்டுமே உள்ளனர். பணத்தை வைத்து அரசியல் செய்து வருகிற சசிகலா ஒரு தீய சக்தி. எந்தக் காலத்திலும் சசிகலாவைக் கட்சியில் சேர்க்கமாட்டோம் என்பதே நிலைப்பாடு.

பாஜக படுகுழிக்கு செல்லும்:பாஜகவில் சசிகலா வரலாம் என நயினார் நாகேந்திரன் கூறியது; அவரது தனிப்பட்ட கருத்து என்று அண்ணாமலையே கூறிவிட்டார். அது பற்றி நான் எதுவும் சொல்லமுடியாது. சசிகலாவை பாஜகவில் சேர்த்தால், தானே படுகுழியில் விழவேண்டிய நிலைக்கு பாஜக செல்ல வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

தைரியம் இல்லாத திமுகவினர்:பாஜக தலைவர் அண்ணாமலை அரசின் திட்ட முறைகேடுகள் குறித்து வெளியிட்டுள்ளார். அதில், தற்போது டெண்டர் முறைகேடுகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கட்டிங், கரப்சன், கட்டப் பஞ்சாயத்துநடந்து வருகிறது. அண்ணாமலை முறைகேடுகள் குறித்து பேசியுள்ளார். அதற்கு ஏன் ஆவேசப்பட வேண்டும் அமைச்சர் மா.சுப்ரமணியன், அண்ணாமலை தவறாகப் பேசி இருந்தால் வழக்கு போடுங்கள். வழக்குப்போட தைரியமில்லை. தவறு செய்தவர்கள் திமுகவினர்.

சென்னை கமிஷனர் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்: அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது; தற்போது அதுபோல இல்லை. நம்ம சென்னை கமிஷனர் ரொம்ப நல்லவர் தான். ஆனால், தற்போது மாட்டிக்கொண்டு முழிக்கிறார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான், என் மீது வழக்கு போட்டார்கள். ஒரு மாதத்திற்கு 10 கொலை தான் கமிஷனரே சொல்லலாமா? 10 கொலை போலீசை பொறுத்தவரை சாதாரணமாகி விட்டது. தமிழ்நாடு போதை மாநிலம் ஆகி, தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஈரோடு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது. மருத்துவத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சொகுசு கப்பல் பயணம்-மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கே போதும்: சொகுசு கப்பல் சென்னை வந்துள்ளது. சொகுசாக வாழக்கூடிய இந்த கப்பலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தான் போக முடியும். நாங்கள் போக முடியாது. ஆன்லைன் ரம்மி அதிமுக ஆட்சி காலத்தில் ஒழிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறது. திமுக அரசு டெண்டர்களில் வெளிப்படத்தன்மை இல்லாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

இதையும் படிங்க: UPI Bus Ticket: கூகுள் பே மூலம் பஸ் டிக்கெட் எப்போது?.. போக்குவரத்து அமைச்சர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details