சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (ஜூலை 26) தொடங்கியது. மாணவர்கள் இன்று (ஜூலை 26) முதல், ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய வலைதளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று காலை முதலே, மாணவர்கள் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க தொடங்கினர்.
25,611 மாணவர்கள் விண்ணப்பம்
விண்ணப்பிக்க தொடங்குவதற்கான முதல் நாளான இன்று மாலை 5.30 மணி வரையில், 25ஆயிரத்து 611 மாணவர்கள், பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர்.
மேலும் 10 ஆயிரத்து 84 மாணவர்கள், முதல் நாளே கலந்தாய்வில் பங்கேற்பதற்கான கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். 5 ஆயிரத்து 363 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 51 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
செப்.14 - அக்.16 வரை கலந்தாய்வு
அதன் பின்னர் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதிவரை கலந்தாய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை, கலந்தாய்வு ஆகிய அனைத்து செயல்முறைகளையும், ஆன்லைன் முறையில் நடத்த உயர்கல்வித் துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
இதையும் படிங்க:மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு