மத்திய நிதியமைச்சகம் நாட்டின் பொருளாதாரம் குறித்த விரிவான அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் பொருளாதாரம் மீட்சியின் பாதையில் பயணிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி, நிதியாண்டின் முதல் காலாண்டில் 23 விழுக்காடு வீழ்ச்சியைக் கண்ட ஜி.டி.பி., அடுத்தக் காலண்டில் மீண்டு 7.5 விழுக்காடு சுருக்கத்தை மட்டுமே கண்டுள்ளது. எனவே 2020-21 நிதியாண்டின் மத்திய காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மீண்டு எழுச்சி காண தொடங்கியுள்ளது.
இது பெரும் வீழச்சிக்குப் பின் ஏற்பட்டுள்ள மீட்சியான இதை 'V' வடிவ வளரச்சி எனலாம்.லாக்டவுனுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி என்பது தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் பலம் கண்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை சந்திக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கட்டுமானத் தொழில் முக்கிய பங்களிப்பை மேற்கொண்டுள்ளது. அதற்கு அடுத்து, வேளாண் துறையும் இந்த வருடம் சிறப்பான விளைச்சலைக் கண்டுள்ளது. ராபி பருவ விளைச்சல் அமோகமாக உள்ளதால், ஊரக பொருளாதார நடவடிக்கை திடமான ஏற்றம் கண்டுள்ளது.
அண்மையில் முடிந்த பண்டிகை கால செயல்பாடுகள் காரணமாக சில மாநிலங்கள் கோவிட்-19 இரண்டாம் அலையைச் சந்தித்துவருகின்றன. அங்கு பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி வரும்வரை மக்கள் முகக்கவசம், சமூக விலகல் நெறிகளை முறையாகப் பின்பற்றினால் தற்போதைய மீட்சி தொடர் வளர்ச்சியாக உருவெடுக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தள்ளாட்டத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை