தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

காஞ்சியில் விநாயகர் சிலை ஆலைகளுக்கு சீல் : 10 பேர் கைது

காஞ்சிபுரம் : விநாயகர் சிலை செய்யும் ஆலைகளுக்கு சீல் வைக்கச் சென்ற அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Vinayagar statue produce company sealed In Kancheepuram
Vinayagar statue produce company sealed In Kancheepuram

By

Published : Aug 19, 2020, 4:56 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று அடிக்கு மேல் காகிதக் கூழ் விநாயகர் சிலை செய்து வரும் ஆலைகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டார். அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரத்தை அடுத்துள்ள அய்யம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை செய்யும் ஆலைகளுக்கு வாலாஜாபாத் வட்டாட்சியர் மித்ராதேவி தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை செய்பவர்கள் வட்டாட்சியர், காவல் துறையினர் ஆகியோரது வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை, சார் ஆட்சியர் சரவணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இதனிடையே, சீல் வைத்த குடோனை மக்கள் உடைக்க முயன்றதால் காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அதிக அளவில் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்த காரணத்திற்காக அய்யம்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி உட்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details