திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சியில் அடங்கிய 18 வார்டுகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரைக் கையாளுவது பேரூராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்து வருவதால், அதனைத் தவிர்க்கும் வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பாதாள சாக்கடைத் திட்டத்தை அறிவித்தார்.
அதற்காக அப்போது குடிநீர் வடிகால் வாரியம் மூலம் டெண்டர் விடப்பட்டு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 54 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் 18 மாதத்தில் முடிக்கவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் அதிகாரிகள் சிலர் கணிசமான தொகையை தரகுத் தொகையாக எதிர்பார்ப்பதாகவும் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, ஏற்கெனவே ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திட்ட மதிப்பு 74 கோடியே 78 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மக்களின் வரிப்பணம் 20 கோடி ரூபாய் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணடிக்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.