தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் உயிரி எரிவாயு உற்பத்தி ஆலை: முதலமைச்சர் தொடங்கிவைப்பு

By

Published : Jun 24, 2020, 7:01 AM IST

சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் நாமக்கல்லில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான கம்பிரஸ்டு பயோ கேஸ் (Compressed Bio gas CBG) எனப்படும் உயிரி எரிவாயு உற்பத்தி ஆலையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

ரூ. 25 கோடி மதிப்பிலான சிபிஜி உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்!
ரூ. 25 கோடி மதிப்பிலான சிபிஜி உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்!

இதில், டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் நாமக்கல்லில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் உற்பத்திப் பணிக்கான இயந்திரங்களையும் அங்கு உற்பத்தியாகும் உயிரி எரிவாயுவை நாமக்கல், சேலம், புதுச்சத்திரம், ராசிபுரம் ஆகிய இடங்களில் சில்லறை விற்பனை செய்யும் நிலையங்களையும் திறந்துவைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்-ஜெர்மனியின் ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு தொழில் நிறுவனமான ஐ.ஓ.டி. (IOT) உள்கட்டமைப்பு, எரிசக்தி சேவைகள் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் 34 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு உற்பத்தி நிலையமான 2.4 மெகாவாட் திறன்கொண்ட உயிரி எரிவாயு உற்பத்தி செய்துவருகிறது.

இந்நிறுவனம் தயாரிக்கும் உயிரி எரிவாயுவிலிருந்து இறுக்க தன்மையிலான உயிரி எரிவாயு (Compressed Bio gas) தயாரிக்கும் வகையில் புதிய ஆலைக்கு 25 கோடி ரூபாய் செலவில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் இப்புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் இறுக்க உயிரி எரிவாயு, 20 டன் உயிரி உரங்கள் (Bio- Manure) தயாரிக்கப்படும். தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுத்திறன் 15 ஆயிரத்து 876 மெகாவாட் ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுத்திறன் இரண்டாயிரத்து 322 மெகாவாட், காற்றாலை மின் நிறுவுத்திறன் எட்டாயிரத்து 523 மெகாவாட், சூரிய ஒளி மின்சக்தி நிறுவுத்திறன் நான்காயிரத்து 54 மெகாவாட், தாவரக்கழிவு மின் நிறுவுத்திறன் 266 மெகாவாட், இணைமின் உற்பத்தி மின் நிறுவுத்திறன் 711 மெகாவாட் ஆகும்.

தமிழ்நாட்டில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுத்திறன் 1,013 மெகாவாட். இதில் தமிழ்நாடு அரசுக்கு 516 மெகாவாட்டும், தனியாருக்கு 497 மெகாவாட்டும் சொந்தமானதாகும்.

சென்னையில் அதிகரித்துவரும் மின் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக, இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் திட்டத்தினை சென்னையை சுற்றியுள்ள பகுதியில் தமிழ்நாடு அரசால் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா, தலைமைச் செயலர் க. சண்முகம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details